படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பு ‘‘என் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவிப்பதா?’’ நடிகை தீபிகா படுகோனே கண்டனம்

மும்பை, 

‘‘பத்மாவதி படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பு தெரிவிப்பது துரதிருஷ்டமானது. என் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்து இருப்பது கேலிக்கூத்து. இதற்காக நான் பயப்படமாட்டேன்’’ என்று நடிகை தீபிகா படுகோனே கூறினார்.

பத்மாவதி

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–ந்தேதி திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வராமல் தள்ளிவைத்து விட்டனர். ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.

திருமணமான பத்மினி அலாவுதின் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு இருக்கிறது என்றும் படத்தில் அதை திரித்து அலாவுதின் கில்ஜியை பத்மினி காதலிப்பதுபோல் காட்சி வைத்துள்ளனர் என்றும் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டி தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்துள்ளனர்.

கேலிக்கூத்து

இந்த பிரச்சினை குறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டி வருமாறு:–

‘‘பத்மாவதி படத்தை தேவை இல்லாமல் எதிர்க்கிறார்கள். இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் எதுவும் இல்லை. படத்தை பார்த்து விட்டு அதில் தவறு இருந்தால் விமர்சிப்பதிலும் எதிர்ப்பு தெரிவிப்பதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பதும் போராட்டங்கள் நடத்துவதும் எனது தலைக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தலைக்கு பரிசு தொகை அறிவித்து இருப்பதால் பாதுகாப்பு அளித்துள்ளனர். நான் இதற்கெல்லாம் பயப்படமாட்டேன். படத்தில் நடித்துள்ள ரன்வீர்சிங்கும் நானும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. சில உறவுகள் ஒரு புள்ளியில் இருந்து விரிவடையும். எங்கள் உறவும் அதுபோல் விரிவடைந்து இருப்பது உண்மைதான்.

திருமணம்

நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது எதுவும் தேவை இல்லை. அந்த அளவுக்கு மனதுக்கு சந்தோ‌ஷமாக இருக்கிறது. எனக்கும் திருமணம் செய்துகொள்ள ஆசை ஏற்பட்டு உள்ளது. ஆனால் எப்போது அது நடக்கும் என்று இப்போது சொல்ல தெரியவில்லை. ஏற்கனவே ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அதில் கசப்பான அனுபவங்களை சந்தித்தேன்.

அது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து வெளியே வர ரொம்ப காலம் ஆனது. அந்த நெருக்கடியில் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் ஆறுதலாக இருந்தார்கள். அதன்பிறகு நடிப்பின் மீதுதான் என் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.’’

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

Google+LinkedinYoutube