இந்தியாவின் நிதி உதவியுடன், ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம்

இந்தியாவின் நிதி உதவியுடன், அண்டை நாடான ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம், பயன்பாட்டுக்கு வந்தது.

நிலப்பகுதிகளால் சூழப்பட்ட, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு, பாகிஸ்தான் வழியாகவே இந்தியாவில் இருந்து, கடல் வழி வர்த்தகம் நடந்து வந்தது.ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, பாகிஸ்தான், அனுமதி தர மறுத்தது. சீனாவின் உதவியுடன், பாகிஸ்தானின் கவாடர் துறைமுகம் அமைக்கும் பணி துவங்கியது.

இதையடுத்து, ஈரானில் ஓமன் வளைகுடா பகுதியில், அரபிக் கடலை ஒட்டியுள்ள சபாஹர் பகுதியில், துறைமுகம் அமைக்கும் பணியை, இந்தியா துவக்கியது. இதற்காக, 3,300 கோடி ரூபாய் நிதி உதவியும் அளித்தது.

அதில், 2,200 கோடி ரூபாய் செலவிலான சபாஹர் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்தன. அதை, ஈரான் அதிபர், ஹாசன் ரூஹானி நேற்று துவக்கி வைத்தார்.இதன் மூலம், 25 லட்சம் டன்னாக இருந்த இந்தத் துறைமுகத்தின் கையாளும் திறன், 85 லட்சம் டன்னாக உயருகிறது.

இந்த துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் கீழ், புதிதாக, ஐந்து கப்பல் தளங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்தியப் பெருங்கடல் வழியாக, ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான துாரம் வெகுவாகக் குறைந்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து திரும்பும் வழியில், வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் தெஹ்ரானுக்கு சென்றார். அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து, அந்நாட்டு அதிபருடன் அவர் ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த துவக்க விழாவில், இந்தியா, கத்தார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Google+LinkedinYoutube