புதிய ரூ.50 நோட்டுகள் பார்வை சவால் உடையவர்களுக்கு ஏற்றதல்ல

புதிய 50 ரூபாய் நோட்டுகள் பார்வை சவால் உடையவர்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிபுணர்கள் மற்றும் பார்வைத்திறனில் பிரச்சினை உடையவர்களிடம் அரசு மற்றும் ஆர்பிஐ கருத்து கேட்கவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்திவுள்ளது.

பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் அனைவருக்கும் ஏற்றதாக இல்லை என்று கூறி மூன்று வழக்கறிஞர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், "பழைய 50 ரூபாய் நோட்டில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எளிதில் தொட்டுணரும் வகையில் சதுர வடிவிலான புடைப்பு அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் புதிய நோட்டில் அத்தகைய அம்சம் ஏதுமில்லை.

இதனால் புதிய நோட்டின் மதிப்பைக் கண்டறிவதில் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இது அவர்களின் அரசிலமைப்பு உரிமையை மீறும் செயலாகும்" என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "இதுதொடர்பாக நிபுணர்கள் மற்றும் பார்வைத்திறனில் பிரச்சினை உடையவர்களிடம் அரசு மற்றும் ஆர்பிஐ கருத்து கேட்கவேண்டும். இந்த மனு குறித்த அரசின் கருத்தை ஜனவரி 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

Google+LinkedinYoutube