இதனால் ஜெருசலேம் யாருக்கு சொந்தம்? என்ற சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளது

அரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

இதனால் ஜெருசலேம் யாருக்கு சொந்தம்? என்ற பல ஆண்டு சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜெருசலேமிற்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல் - அரபு உலகம் இடையிலான மோதல் மீண்டும் கூர்மையாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் போராட்டத்தின் பின்னணியை சற்று பின்னோக்கி பார்க்கலாம்.

ஜெருசலேம் என்பது யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் தொடர்பான பகுதியாக ஆரம்பம் முதலேய பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த மூன்று தரப்பினரும் இதற்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான ஜெருசலேமில், பழங்கால கட்டிடங்களும் உள்ளன. ஜெருசலேமின் பழைய நகரம் உலகின் பாரம்பரிய பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் சாலமோன் காலத்து தேவாலயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த நூற்றாண்டில் ஜெருசலேம் மோதல் தீவிரமடைந்தது 1948-ல் தான். அப்போது நடந்த அரபு - இஸ்ரேல் போரின் போது ஜெருசலேம் நகரின் மேற்குப் பகுதியை இஸ்ரேல் கைபற்றியது. மற்ற பகுதிகள் ஜோர்டானின் வசம் சென்றன. பின்னர் 1967-ம் ஆண்டு நடந்த போரில் ஜோர்டான் வசம் இருந்த ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. அன்று முதல் ஜெருசலேமை தன் வசம் வைத்துள்ள இஸ்ரேல், அங்கு அரசு அலுவலகங்களை அமைத்தது.

ஆனால், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை எந்த நாடும் ஏற்றுக் கொள்ளவில்லை. உலக நாடுகளின் தூதரகங்கள் அனைத்தும் டெல்அவிவ் நகரில் அமைந்துள்ளன. அந்த நகரை தான் இஸ்ரேலின் தலைநகராக உலக நாடுகள் ஏற்றுள்ளன. ஜெருசலேம் மீது இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் அந்த சர்ச்சையில் தலையிட உலக நாடுகள் விரும்பவில்லை.

இதுபற்றி சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியரும், சர்வதேச அரசியல் குறித்த ஆய்வாளருமான லாரன்ஸ் கூறியதாவது:

ஜெருசலேம் நகரின் வரலாறு கிமு 3000 ஆண்களுக்கு முந்தையது என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான ஏராளமான தொல்லியல் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. எனினும் நவீன வரலாற்றில் 1924-ம் ஆண்டிற்கு பிறகுதான் பெரிய அளவில் பிரச்சினைகள் எழுந்தன. ஜோர்டான் அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முனைந்ததை யூத மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வரலாற்று ரீதியாக மட்டுமின்றி இட அமைப்பு முறையிலும் அந்நகரம் இருதரப்புக்குமே மிக முக்கியமானது.

ஜெருசலேம் என்பது தனக்கான அங்கீகாரமாக பாலஸ்தீனம் கருதுகிறது. ஆனால், ஜெருசலேம் தனது வரலாற்று உரிமை என இஸ்ரேல் கருதுகிறது. எனவே இருதரப்பும் இதை விட்டுக்கொடுக்க முடியாது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக் கொண்டதன் மூலம் இந்த பிரச்சினை தீவிரமாகியுள்ளது.

அரபு நாடுகள் இதனை ஏற்றுக் கொள்ள தயாரில்லை. இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பு மாநாட்டில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. அரபு நாடுகள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். இந்த விவகாரம் மத்திய கிழக்கு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் விடாப்பிடியாக இருப்பதால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் சூழல் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க வேண்டிய நடவடிக்கையில் ஐநா சபையும் ஈடுபட்டுள்ளது’’ எனக் கூறினார்.

Google+LinkedinYoutube