ஓட்டுநர்களுக்கு நேரக்கட்டுப்பாடு, அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பொருந்துமா

தினசரி 8 மணி நேரத்துக்கு மேல் சுற்றுலா வாகனங்களை ஓட்ட தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை சாலை விபத்துக்களைக் குறைக்க உதவுமா? என்னதான் தடைபோட்டாலும், விபத்துக்களைக் குறைக்க முடியாதா? என்று நேயர்களிடம் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் தங்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

முதலில், ஃபேஸ்புக் நேயர் சையத் இக்ரம், “12 மணி நேரம் ஓட்டுற அரசு பேருந்து ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து பண்ணுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் சந்திரன் என்ற நேயரோ, “உபேர், ஓலா ,பாஸ்ட்டிராக் ,போன்ற கால் டாக்ஸி நிறுவவனங்களை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்” என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.

“விழாக்காலங்களில் அரசுப் பேருந்து ஓட்டுனர்களை 2 அல்லது 3 நாட்கள் ஓய்வின்றி பேருந்துகளை இயக்கச் சொல்லும் அரசுக்கு இந்த உத்தரவு பொருந்துமா?” என்று வினவுகிறார் ஃபேஸ்புக் நேயர் மானி எம்.என்.

“எல்லா ஊர்களிலும் வாடகை கார் ஓட்டுபவர்கள் பண்டிகை, சுபநாட்கள் தவிர மற்ற நாட்களில் சும்மா தான் இருக்காங்க . அந்த நேரத்தில் ஓட்டுனர்களுக்கு படி குடுக்குமா இந்த அரசு” என்று லிங்கவேல் ராஜா கேட்டுள்ளார்.

சாலை விபத்து காரணம் குடி போதை மற்றும் செல்போன் பேசுவது. இதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வந்தால் விபத்தைத் தடுக்கலாம் என்று பி. மோகன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெற்றி என்ற ஃபேஸ்புக் நேயரோ, “வாகனங்களின் பெருக்கத்தையும் மக்கள் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாதவரை விபத்துகளை குறைக்கமுடியாது . ஓட்டுநர்கள் அனைவரையும் அரசு ஊழியர்கள் ஆக்குங்கள் நீங்கள் அறிவித்த இந்த அறிவான சட்டத்தை வரவேற்கலாம்” என்கிறார்.

பரமேஸ்வரன் ராமதாஸ் என்ற நேயர், “500 கிலோமீட்டர் தூரம் ஒருவர் பயணம் செய்ய வேண்டும் என்றால் 9 மணி நேரத்திற்கு மேல் ஆகும் அப்போது என்ன செய்வது. இடையில் ரூம் போட்டு கொள்ளவா? என்று கிண்டலாகக் கேட்கிறார்.

இராஜசேகர் தங்கராசு என்ற ஃபேஸ்புக் நேயர், “கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும். ஏனெனில் தற்போது ஒரு நாளில் 18 மணிநேரம் வேலை செய்கிறோம். மேலும் கட்டண நிர்ணயம், ஓலா மற்றும் ஊபர் போன்ற நிறுவனங்களை கண்காணித்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். எல்லா துறையினரும் வாரத்திற்க்கு 48 மணிநேரம் வேலை செய்துகொண்டிருக்கும் போது நகரங்களில் டாக்சி டிரைவர்கள் வாரத்திற்க்கு குறைந்தபட்சம் 100 - 120 மணி நேரங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செழியன் சு என்ற நேயர், “முதலில் போன் அழைப்பை தவிர்க்க வேண்டும் அல்லது பாதுகாப்பு holder headset பயன்படுத்த வேண்டும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டிகள் கவனமாக பார்த்துக் வாகனங்கள் இயக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலை வேகத்தின் அளவு 80கிலோ என்று அளவு ஒட்ட வேண்டும். முந்திச் செல்லும்போது வலது பக்கத்தில் முந்த வேண்டும். குறிப்பாக கனரக வாகனங்களை இடது புறம் மட்டுமே இயக்க வேண்டும் சாலையில் கால்நடைகள் செல்வதால் அதிக விபத்து ஏற்படுகிறது. அதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வேகத்தின் அளவு 70கிமீ வரை மட்டுமே போக வேண்டும். டயர்களில் காற்றின் அளவு பார்க்க வேண்டும். இரவுப் பயணத்தில் 2 முதல் 5 வரை ஒய்வு காட்டாயம். வாகனம் முன் சொல்லும்போது 20மீட்டர் இடைவெளி விட்டு இயக்க வேண்டும். இதைப் பின்பற்றினால் போதுமானது. மது அருந்தி இருந்தால் கண்டிப்பாக பயணம் தவிர்க்க வேண்டும்” என்று வாகனம் ஓட்டும்போது பொதுவாக கடைபிடிக்க வேண்டிய விதிகளை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

“நடைமுறை சாத்தியமே இல்லை. எவ்வாறு கண்காணிக்க முடியும். அப்படி சாத்தியம் என்றால் கண்டிப்பாக விபத்துகள் குறையும்” என்பது முரளிதரனின் பதிவு.

சி.உம். சின்னத்துரை என்பவர், “மனிதனை போல இல்லாமல் அடிமை போல நடத்தும் கம்பெனிகள் நிறைய உண்டு. அரசு கணக்குப்படி 8 மணி நேரம் வேலை என்றால் 10, 12 மணி நேரம் வேலை வாங்கும் கம்பெனி தமிழகத்தில் நிறைய உண்டு. இதனால் உடல் பாதிப்பு. கணக்குப்படி 8 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்பது 10, 12 மணிநேரம் ஆவதால் இதற்கு மேலே வாகனம் ஓட்டும்போது தூக்கம் வருகிறது. விபத்துகளும் நடக்கிறது. அனைத்தும் ஊழல். கம்பெனிக்கு சோதனைக்கு செல்லும் அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு வாகனம், உணவு, பரிசுகள் இவைகளை வாங்கிகொண்டு கண்டுகொள்ளாமல் செல்வதால் வருகின்றது” என்கிறார்.

முதலில் நல்ல தரமான சாலைகளை போட சொல்லுங்க, சாலைகளில் கட்டவுட் பேனர்கள் வைக்கிறதுக்கு தடை போடுங்க என்று தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார் செல்வா மோகன்தாஸ்

Google+ Linkedin Youtube