உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் காஞ்சனமாலா

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக‘பாரா’ நீச்சல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்களுக்கான 200 மீ., ‘மேட்லே எஸ்–11’ பிரிவில் இந்தியாவின் காஞ்சனமாலா பாண்டே மட்டுமே பங்கேற்றார். துடிப்பாக செயல்பட்ட இவர் இலக்கை 3 நிமிடம் 56:03 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம், இத்தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இந்த தொடருக்கு இந்திய வீராங்கனை சார்பில் காஞ்சனமாலா மட்டுமே தகுதி பெற்றிருந்தார். 100 மீ., ‘பிரீஸ்டைல்’ பிரிவில் இவர் 4வது இடம் பிடித்தார். தவிர, 100 மீ., ‘பிரஸ்ட்டிரோக்’, ‘பேக்ஸ்டிரோக்’ பிரிவில் 5வது இடம் பிடித்தார்.

மகாராஷ்டிராவின் அம்ராவதி நகரை சேர்ந்தவர் காஞ்சனமாலா, 26. கண்பார்வை இல்லாத இவர், நாக்பூரில் உள்ள கிளப் ஒன்றில் பயிற்சி எடுத்து வருகிறார். தற்போது, ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலையில் ஜெர்மனி நடந்த பெர்லின் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இவர் பங்கேற்றார். அப்போது, இந்திய பாரா தடகள சங்கத்தினர் உதவி செய்யாத காரணத்தால் பெர்லின் நகரில் பணம் இன்றி தவித்தார். இதனால், பஸ்சில் ‘டிக்கெட்’ இல்லாமல் பயணத்த காஞ்சனாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தடையையும் தாண்டிய இவர், 200 மீ., ‘மேட்லே’  உள்ளிட்ட பிரிவில் அசத்தியதால் உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார். காஞ்சனாவுக்கு உதவி கிடைக்காததற்கு, இந்தியாவில் பெரும் விவாதத்தை கிளப்பியது. ஒலிம்பிக் தங்க மகனான (2008, பீஜிங் ) துப்பாக்கி சுடுதல்வீரர் அபினவ் உள்ளிட்டோர் காஞ்சனாவுக்கு ஆதரவு அளித்திருந்தனர்.

இது குறித்து காஞ்சன கூறுகையில்,‘‘ உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க சிறப்பாக தயாராகி இருந்தேன். ஆனால், தங்கம் வெல்வேன் என எதிர்பார்க்கவே இல்லை. இது, மிகவும் வியப்பாக அமைந்தது. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை,’’ என்றார்.

Google+ Linkedin Youtube