செயற்கைக்கோளை உருவாக்கிய பள்ளி மாணவர்கள்!

இவர்களின் அறிவியல் ஆர்வத்துக்கு பள்ளிச் சூழலும், அங்குள்ள கோளியல் மையமும் உதவி செய்திருக்கின்றன. அத்துடன், ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனத்தின் முன்னாள் குழு இயக்குநர் சுரேஷ் நாயக்கும் வழிகாட்ட, பத்தே நாட்களில் ஒரு மினி செயற்கைக்கோளை உருவாக்கிவிட்டனர். பத்தாயிரம்தான் மொத்தச் செலவு.

‘சோடா கேன்’ அளவில் இருப்பதால் ‘கேன்சாட்’ என்று இவர்கள் பெயர் சூட்டியிருக்கும் இந்தச் செயற்கைக்கோள், பாராசூட் மூலம் பள்ளிப் பகுதியில் பறக்கவிடப்படுகிறது. வளிமண்டல அழுத்தம், சுற்றுச்சூழல் வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற விஷயங்களை துல்லியமாகப் பதிவு செய்து, இணைப்பில் உள்ள மடிக்கணினிக்கு அனுப்புகிறது.

தாங்கள் உருவாக்கியிருக்கும் செயற்கைக்கோள், அடக்கமானது, விலை குறைவானது என்பதால், உள்ளூராட்சி நிர்வாகங்கள், நிவாரணப் பணி குழுக்கள், விவசாயிகள் போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று வேதாந்தும் அர்பித்தும் கூறுகின்றனர். இந்தச் செயற்கைக்கோளை ஒரு லேப்டாப்புடன் ‘வை-பை’ மூலம் இணைப்பதன் வாயிலாக, தேவையானவர்கள், தேவையான தகவல்களை உடனுக்குடன் பெறலாம் என்கின்றனர்.

இயல்பான அறிவியல் ஆர்வம்தான் இந்த இரு வரையும் இணைத்திருக்கிறது. பள்ளிப் பாட வேளை, வீட்டுப் பாட நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் இவர்கள் பார்ப்பதும், படிப்பதும் அறிவியல் சார்ந்த விஷயங்களைத்தான்.

“எங்களின் அடுத்த முயற்சி, பூமிப் பரப்பில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் சென்று இயங்கும் செயற்கைக்கோளை உருவாக்குவது. ஐ.எஸ்.ஆர்.ஓ. ராக்கெட் மூலம் அந்தச் செயற்கைக்கோள் ஏவப் படும்” என்கின்றனர், கோரஸ் குரலில்.

கெட்டிக்கார குட்டி விஞ்ஞானிகள்!

Google+LinkedinYoutube