2ஜி வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது நாராயணசாமி கருத்து

புதுச்சேரி,

2ஜி வழக்கி தீர்ப்பு வெளியானது குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. தணிக்கை அதிகாரி யூகத்தின் அடிப்படையில் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இது சம்பந்தமாக அப்போதே காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கினை தொடர்ந்து அதைப்பற்றியே பெரிதாக பேசி பாரதீய ஜனதாவும், அ.தி.மு.க.வும் ஆட்சியை கைப்பற்றின. ஆனால் இப்போது முறைகேடு நடக்கவில்லை என்று தீர்ப்பு வந்துள்ளது. தர்மம் நிலைத்து நிற்கிறது.

காங்கிரஸ்–தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று தெளிவாக இப்போது தெரியவந்துள்ளது. ஆனால் முன்பு இதை பெரிய ஊழலாக சித்தரித்தார்கள். பாரதீய ஜனதா கட்சியினர் பாராளுமன்றத்தை முடக்கினார்கள். ஆனால் இப்போது நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

இப்போது பாரதீய ஜனதா கட்சியினரின் பொய்ப்பிரசாரம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின் நாடகங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்.இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Google+LinkedinYoutube