ராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 33 பேர் சாவு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தின் லால்சோட் பகுதியில் புகழ்பெற்ற ராம்தேவரா கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் நேற்று பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் காலை சுமார் 7 மணியளவில் ராஜஸ்தானின் சவாய் மதோபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மலர்ன துங்கர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

33 பயணிகள் சாவு

அங்குள்ள பனாஸ் ஆறுக்கு மேல் கட்டப்பட்டு இருந்த பாலத்தில் பஸ் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை முந்த முயன்றது. இதில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சுமார் 100 அடிக்கு கீழே சென்று கொண்டிருந்த ஆற்றில் தலை கீழாக கவிழ்ந்தது.

இதில் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியும், தண்ணீரில் மூழ்கியும் 33 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

சிறுவன் ஓட்டி வந்தான்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் இறங்கினர். அவர்கள் கியாஸ் வெல்டிங் மூலம் பஸ்சின் ஜன்னல்களை உடைத்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளின் உடலை மீட்டனர். காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, அந்த பஸ்சை அனுபவமில்லாத ஒரு சிறுவன் ஓட்டி வந்ததாகவும், அதுவே விபத்துக்கு காரணமாகி விட்டதாகவும் தெரியவந்தது.

பிரதமர் மோடி இரங்கல்

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். விபத்து மீட்பு நடவடிக்கைகளை மாநில அரசு உன்னிப்பாக கவனித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இதைப்போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது அனுதாபங்களை தெரிவித்து உள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு மாநில அரசை கேட்டுள்ளதாக தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்த அவர், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு மாநில காங்கிரசாரையும் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Google+ Linkedin Youtube