வட கொரியாவுக்கு புதிய பொருளாதார தடை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிரடியால் நெருக்கடி

நியூயார்க்,

வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது அந்த நாட்டுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

வடகொரியா, தொடர்ந்து அணு குண்டுகளை வெடித்தும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணைகளை ஏவி சோதித்தும் வருகிறது.

இதன்காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து, நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

ஆனாலும் அயராமல், சோர்ந்து போகாமல் கடந்த மாதம் அமெரிக்காவின் எந்த ஒரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ‘ஹவாசாங்-15’ ரக ஏவுகணையை ஏவி வடகொரியா சோதித்தது. இதுவரை வடகொரியா ஏவி சோதித்த ஏவுகணைகள் எல்லாவற்றிலும் இது அதிக சக்தி கொண்டது என்பதால் உலக நாடுகள் அதிர்ந்தன.

வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதித்து, இத்தகைய திட்டங்களை மேலும் தொடராமல் இருக்க அழுத்தம் தர வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வலியுறுத்தியது.

அந்த வகையில் அமெரிக்கா கொண்டு வந்த புதிய பொருளாதார தடை தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வடகொரிய ஆதரவு நாடுகளான சீனாவும், ரஷியாவும்கூட வாக்களித்தன.

மொத்தம் உள்ள 15 உறுப் பினர்களும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டன.

* இந்த தீர்மானத்தால் வடகொரியாவின் பெட்ரோலியப்பொருட்கள் இறக்குமதி 90 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டு விடும்.

* வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் சப்ளை ஆண்டுக்கு 5 லட்சம் பீப்பாய்களாக குறைந்து விடும்.

* வட கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி, ஆண்டுக்கு 40 லட்சம் பீப்பாய்களாக குறைக்கப்பட்டு விடும்.

* வடகொரியா தனது எந்திரங்கள், மின் உபகரணங்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.

* உலகின் பிற நாடுகளில் வேலை பார்க்கிற வடகொரிய நாட்டினர் 24 மாதங்களில் நாடு திரும்பி விட வேண்டும்.

இந்த தடைகள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற வடகொரியாவுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகம் அமைதியைத்தான் விரும்புகிறது, சாவை அல்ல என்பதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் காட்டி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் கருத்து தெரிவிக்கையில், “வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த நடவடிக்கைகள் முக்கிய காரணியாக அமையும்” என்று கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரிய தீபகற்பத்தின் நிலைமை குழப்பமாகவும், பதற்றமாகவும் அமைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். பதற்றத்தை குறைப்பதற்கான வழிவகைகளை காண வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Google+LinkedinYoutube