வட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய இருவருக்கு அமெரிக்க பொருளாதார தடை

வாஷிங்டன்

கடந்த சில மாதங்களில், வட கொரியா பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது. இந்த ஏவுகணை முழு அமெரிக்காவையும் அடையக்கூடியது என வட கொரியா கூறியிருந்தது.

வட கொரியாவின்  ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக,  வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்தது. ஐ.நாவின் இந்த நடவடிக்கை போருக்கான செயல் என்றும்,முழு பொருளாதார முற்றுகைக்குச் சமமானது என்றும் வட கொரியா கூறியது.

வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய  கிம் ஜோங்-சிக் மற்றும் ரி பியோங்-கொல் ஆகியோருக்கு அமெரிக்கா தற்போது பொருளாதார தடை விதித்து உள்ளது.இந்த இரண்டு அதிகாரிகளும், ஆயுத தயாரிப்பாளர் ஜங் சான்-ஹெக்கிம், கிம் ஜோங் உன்னால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் என கடந்த மே மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரிவித்து இருந்தது.

அமெரிக்காவின் கருவூலத்துறை வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில், இவர்கள் இருவரும் ''முக்கியத் தலைவர்கள்'' எனவும் கூறியுள்ளது.

அமெரிக்காவின் புதிய தடைகளால், இந்த இரு அதிகாரிகளும் அமெரிக்காவில் எந்த பண பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. அமெரிக்காவில் அவர்கள் ஏதேனும் சொத்து வைத்திருந்தால் அது முடக்கப்படும்.

Google+ Linkedin Youtube