ஈரானில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

துபாய்,

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு பகுதியில் இன்று இலேசன நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.  56 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகாமையில் உள்ள  மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். 

டிசம்பர் 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகளாக இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய சேதத்தில் 2 பேர் பலியாகினர்.  அதிக நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது.  கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 31 ஆயிரம் பேர் பலியானது நினைவிருக்கலாம்.

Google+ Linkedin Youtube