பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை போக்க வேண்டும்; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 85 சதவீதம் சிவகாசியில் தான் தயாரிக்கப்படுகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வடமாநிலங்களின் பட்டாசு தேவை தான் மிகப்பெரிய சந்தை என்பதால், அங்குள்ள வணிகர்கள் ஓராண்டுக்கு முன்பே முன்பணம் கொடுத்து தங்களுக்கு தேவையான பட்டாசின் தேவையை தெரிவித்து விடுவார்கள்.

ஆனால், பட்டாசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில் ஒரு வணிகர் கூட முன்பணம் தரவில்லை. இதனால் மூலப்பொருட்களுக்கான முதலீடு இல்லாதது ஒருபுறம், பட்டாசுகளை உற்பத்தி செய்தாலும் அதை விற்க முடியுமா? என்ற கவலை மறுபுறம் வாட்டுவதால் தான் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன. பட்டாசுக்கு தடை விதிக்கக்கூடாது, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் விரைவாக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது தான் இவர்களின் கோரிக்கை ஆகும். எந்த அடிப்படையில் பார்த்தாலும் இந்த கோரிக்கைகள் நியாயமானதே.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் மாசுமூட்டம் ஏற்படுவதற்கும் பட்டாசு வெடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பட்டாசுக்கு தடை விதிப்பதன் மூலம் சிவகாசி பட்டாசு ஆலைகள் மூடப்பட்டால், சீன பட்டாசுகள் இந்தியாவில் சட்ட விரோதமாக விற்கப்படும் நிலை உருவாகும். சுமார் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழப்பார்கள். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு பட்டாசு தயாரிப்பு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Google+LinkedinYoutube