ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

மெல்போர்ன்,
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் மூன்று டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி துணை கேப்டன் டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்டும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வார்னர் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.   பான்கிராப்ட் 26 ரன்களில் (95 பந்து) கிறிஸ்வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து உஸ்மான் கவாஜா ஆட வந்தார்.

டேவிட் வார்னர் 103 ரன்களில் (151 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜாவும் (17 ரன்) வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டீவன் சுமித் 65 ரன்களுடனும் (131 பந்து, 6 பவுண்டரி), ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் (93 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

2 ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. ஷான் மார்ஷ் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டீவன் சுமித் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த வீரர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இதனால், 119 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பிராடு  4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.  26.1 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.

Google+LinkedinYoutube