தவறுதலாக துப்பாக்கி சூட்டில் பலி: பெரியபாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் முனிசேகர்

சென்னை,

மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியபாண்டி(48). கொளத் தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில் வட மாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம்  பாலி மாவட்டத்துக்கு சென்றார். அவருடன் அவரது நண்பரான இன்ஸ்பெக்டர் முனி சேகர் மற்றும் 5 போலீசாரும் சென்றனர்.

அங்கு நாதுராம் என்ற பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டுக்கு பலியானார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு வந்த தகவலில் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்ததில் கொள்ளையர்கள் அதை எடுத்து சுட்டு விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்  ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் தமிழக போலீசார் சுட்டிருக்கின்றனர் என்று கூறப் பட்டது பரபரப்பை ஏற்படுத் தியது. இது தொடர்பாக சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளும் முனிசேகரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தனது செயல்பாட்டால் எந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். என்பதற்கு பொது மக்கள் பலரே அவருக்கு பேனர்கள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருவதே சாட்சி.

முனிசேகரின் துப்பாக்கி குண்டு தான் பெரிய பாண்டியின்  உடலை துளைத்து  இருக்கிறது  என்று ராஜஸ்தான் போலீசார் கூறிய போதும் முனிசேகர் என் கணவரின் நெருங்கிய நண்பர். அவர் சுட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று நம்ப மறுத்தார் பெரிய பாண்டியின் மனைவி பானுரேகா.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய பாண்டிக்கு அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகில் உள்ள மூவிருந்தாளியில் 16-ம் நாள் காரியம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் முனிசேகர் சென்றுள்ளார். அப்போது ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை விளக்கி கூறி பானுரேகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டுள்ளார்.

மேலும் அங்கிருந்த பானுரேகாவின் தந்தை வெள்ளைபாண்டியன் காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் அங்கு கண்ணீர் மல்க இருந்ததாக பானு ரேகாவின் சகோதரர் தெரிவித்துள்ளார். 

முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி  பெரியபாண்டி உயிரை பறித்துள்ளது. நடந்த சம்பவங்களை அறிந்து உயர் அதிகாரிகளே முனி சேகரை பெரியபாண்டி குடும்பத்தினரை சந்திக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தந்தி டிவிக்கு பானுரேகா கூறியதாவது:-

என்னிடம் முனி சேகர் மன்னிப்பு கேட்டார். எனக்கு பெரியபாண்டியனுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை அவர் எனது நண்பர் என கூறினார். எங்களிடம் அங்கு 3 பேர் இருப்பதாக கூறி தான் கூட்டி சென்றார்கள் ஆனால் அங்கு 10 க்கும் மேற்பட்டவர்கள கையில் கம்பு மற்றும் ஆயுதங்களுடன் இருந்தனர். நாங்கள் தப்பிக்கும் போது   பெரிய பாண்டி மட்டும்  மாட்டி கொண்டார். அவரை அவர்கள் தாக்கினர் அவரை காப்பாற்றவே அவர்களை நோக்கி சுட்டேன் அவர்கள்  பெரியபாண்டியை விட்டு விட்டு ஓடி விடுவார்கள் என எண்ணினேன் ஆனால் தவறுதலாக பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது. உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். தவறுதலாகத்தான்  அவர்மீது   குண்டு பட்டு  விட்டது என கூறி என்னிடம் மன்னிப்பு கேட்டார். என கூறினார்.

Google+LinkedinYoutube