வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

போட்செப்ஸ்ட்ரூம், 

தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூமில் நடந்தது.

முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 496 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டீன் எல்கர் 199 ரன்னும், ஹசிம் அம்லா 137 ரன்னும், அறிமுக வீரர் மார்க்ராம் 97 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 320 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது.

176 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 56 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் 424 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து இருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 16 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சில் வங்காளதேச விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 32.4 ஓவர்களில் 90 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக இம்ருல் கேய்ஸ் 32 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் மகராஜ் 4 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், மோர்னே மோர்கல் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புளோயம்பாண்டினில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. தசைப்பிடிப்பு காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் விலகி இருக்கிறார். அவர் களம் திரும்ப ஒரு மாதம் பிடிக்கும் என்று தெரிகிறது. 

Google+ Linkedin Youtube