கமல்ஹாசனின் ‘இந்தியன்-2’ படம் ஊழலுக்கு எதிரான படமாக தயாராகிறது

கமல்ஹாசன் தந்தை, மகனாக இரு வேடங்களில் நடித்து 1996-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இந்தியன்’. ஷங்கர் இயக்கி இருந்தார். இதில் கமல்ஹாசனின் வயதான இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பேசப்பட்டது. லஞ்சம் வாங்குபவர்களை வர்ம கலையால் வீழ்த்துவதும் லஞ்சம் வாங்கும் மகனையே கொல்ல துணிவதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்னிலையில் ஷங்கர் அறிவித்து இருந்தார். அதன்பிறகு கமல்ஹாசன் அரசியல் பணிகளில் தீவிரமாகி விட்டதாலும் அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாலும் பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அறிமுக விழா

அதனால் இந்த படத்தை ஷங்கர் கைவிட்டு விட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தைவான் நாட்டில் ‘இந்தியன்-2’ படத்தின் அறிமுக நிகழ்ச்சியை ஷங்கர் தொடங்கி வைத்து பட வேலைகளை ஆரம்பித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். அந்த நாட்டில் இந்தியன்-2 என்ற வாசகத்தை பலூனில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி உயரத்தில் பறக்க விட்டார்.

அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைக்கதையை தயார் செய்து நடிகர்-நடிகைகள் தேர்வை முடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்திலும் கமல்ஹாசன் இரு வேடங்களிலேயே நடிப்பார் என்று தெரிகிறது.

அரசியல் கதை

இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்தே திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பாகத்தில் லஞ்சத்துக்கு எதிராக கதையின் கரு இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான அரசியல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நாட்டு நலனில் அக்கறை இல்லாமல் அரசியல்வாதிகள் இருப்பதாக தொடர்ந்து சாடி வருகிறார். தமிழகத்தில் ஊழல் மலிந்து உள்ளது என்றும் குற்றம்சாட்டி உள்ளார். தனது கட்சியின் கொள்கைகளை இந்த படத்தில் அழுத்தமாக பதிவு செய்வார் என்று தெரிகிறது. படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் தொடங்க இருக்கிறது. 

Google+ Linkedin Youtube