'விசுவாசம்' படப்பிடிப்பு படங்கள் வெளியானது

ஹைதராபாத்தில் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சிகள் படப்பிடிப்புடன் தொடங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் புகைப்படங்கள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘விசுவாசம்’. திரையுலக வேலைநிறுத்தப் போராட்டத்தால், இதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று (மே 7) முதல் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நீண்ட நாட்கள் கழித்து இதில் சால்ட் - அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படப்பிடிப்பு புகைப்படங்கள் எதுவுமே வெளியாகக்கூடாது என்று பல கெடுபிடிகள் படக்குழுவுக்கு விதிக்கப்பட்டது. ஆனால், அதைத்தாண்டி சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் ’TN 60 AB 2435’ என்ற புல்லட் வண்டி புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பதால், தேனியைச் சுற்றி நடக்கும் கதை என்று யூகித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

பாடல் காட்சிகள் படப்பிடிப்பைத் தொடர்ந்து, இரண்டு சண்டைக்காட்சிகளையும் முதற்கட்ட படப்பிடிப்பில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் அஜித்துடன் நடிக்க நயன்தாரா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2018 தீபாவளிக்கு வெளியீடு என்று படக்குழு அறிவித்திருந்தாலும், படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்கியிருப்பதால் சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும்.

Google+ Linkedin Youtube