“ரஜினியின் பவரை ‘காலா’வில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்” - பா.இரஞ்சித்

‘ரஜினியின் பவரை ‘காலா’வில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் இது ரிலீஸாக இருக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் இசை வெளியீட்டு விழா, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் பேசிய பா.இரஞ்சித், “இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து வியப்பாக இருக்கிறது, மகிழ்ச்சி. எனக்கு மறுபடியும் இவ்வளவு பெரிய மேடையைக் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி.

ஏனென்றால், ‘கபாலி’ ரிலீஸுக்குப் பிறகு நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானது. அதேசமயம், கலவையான விமர்சனங்களும் கிடைத்தன. இருந்தாலும், என்னுடைய பார்வை என்ன என்பதில் தெளிவாக இருந்தேன். என்னுடைய ஸ்பேஸை திரும்பக் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி. இது மக்கள் சினிமா. மக்களுக்கான சினிமா. மக்களில் ஒருவருக்கான சினிமா.

வாழ்க்கையின் இயல்பான தருணங்களைத்தான் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். படங்களில் பார்க்கும் ரஜினி சாரை விட, நேரில் பார்க்கிற ரஜினி சாரிடம் இருக்கும் பவரை என்னுடைய படங்களில் கொண்டுவர வேண்டும் என்பது ஆசை. அவரிடம் இருக்கும் இயல்பு, எளிமையில் ஒரு பவர் இருக்கிறது. அதை, ‘காலா’வில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். சார் என்னை மறுபடியும் அழைத்தபோது, ‘இந்தப் படம் கமர்ஷியலாக இருக்க வேண்டும்’ என்றார். இது கமர்ஷியல் படம்தான். அதேசமயம், மக்களின் பிரச்சினைகளையும் பேசியிருக்கிறோம். ஏனென்றால், ரஜினி சாரின் வாய்ஸ் பவர்ஃபுல்லானது” என்றார்.

Google+LinkedinYoutube