அமெரிக்கா ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது

ஈரானுடன் அமெரிக்கா செய்து  கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து  விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

ட்ரம்ப்பின் இந்த விமர்சனத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரஹானியும் தக்க பதிலடி அளித்து வந்தார். அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் அது அந்நாட்டின் வரலாற்று தவறாக அமையும் என்று அவர் எச்சரித்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஈரானுடன் செய்துக் கொண்ட அணுஆயுத ஒப்பந்தம்  ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தார். இதற்கான பதிவேட்டிலும்  ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இதுகுறித்து ட்ரம்ப் பேசும்போது, "இந்த குறைபாடுடைய சிதைவடைந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தயாரிக்கும் அணுகுண்டுகளை நாம் தடுக்க முடியாது. ஈரானுடனான ஒப்பந்தத்தில் குறைபாடு உள்ளது. நாம் ஒன்றும் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியும். ஈரான் ஒப்பந்தத்தில் கதை புனையப்பட்டிருக்கிறது. ஒரு கொடூரமான ஆட்சி சமாதானமாக அணுஆயுத ஒப்பந்தத்தை மட்டுமே விரும்புகிறது.

ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தின் மூலம் பொய் கூறியுள்ளதை சமீபத்தில் இஸ்ரேல் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. ஈரானுக்கு அணுஆயுத வழங்கும் பிற நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்" என்றார்.

ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அணுஆயுத ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடனான தங்களது செயல்பாடுகளை அமெரிக்கா தடுக்க வேண்டாம் எனவும் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளன.

ட்ரம்பின் முடிவு குறித்து ஈரான்  ஹசன் ரவ்ஹானி கூறும்போது, அணுஆயுத ஒப்பந்தம் இன்னும் இருக்கிறது என்று நம்புகிறேன். இது ஒரு உளவியல் போர்,  இதில் டிரம்ப் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம்"என்று கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube