ஆதாருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்ற அரசியல்

ஆதார் அட்டைக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தல், செல்போன் சிம்கார்டு புதிதாகப் பெறுதல், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கு ஆதார் கார்டை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஏ.கே.சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஓய்.சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் கடந்த 4 மாதங்களாக விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்குகளைத் தாக்கல் செய்தவர்களுக்கு ஆதரவாக கபில் சிபல், பி.சிதம்பரம், ராகேஷ் திவேதி, ஷியாம் திவான், அரவிந்த் தாதர், ராக்கேஷ் திவேதி ஆகியோரும், மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலும் ஆஜராகி வாதாடினார்கள்.

கடந்த 4 மாதங்களாக நடந்த வாதத்தில் அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், புதிய சிம்கார்டு பெறுவதற்கும், அரசின் சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்பதை நியாயப்படுத்தி வாதிட்டார்.

ஆனால், ஆதார் அட்டையை மொபைல் போனுக்கும் அரசு கட்டாயப்படுத்தி, உத்தரவைத் தவறாக அமல்படுத்திவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், ஆதார் கட்டாயமாக்கும் சட்டத்தை நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது சரியல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக நடந்த விசாரணை முடிந்த நிலையில், அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நீதிபதிகள் தெரிவித்து, தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

Google+ Linkedin Youtube