நாட்டில் உள்ள சிறைகளில் அதிக அளவில் கைதிகள் உள்ளதால் தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் 1,382 சிறைகள் உள்ளன. இதில் அளவுக்கு அதிகமாக, 150 சதவீதம் வரை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைகளில் அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என்றும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கு நீதிபதிகள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தனர். கைதிகளுக்கும் மனித உரிமை உள்ளது என்றும் அவர்களை விலங்குகளைப் போல அடைத்து வைக்கக் கூடாது என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற ஆலோசகர் (அமிகஸ் கியூரி) ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில் பல சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக, சிலவற்றில் 150 சதவீதத்துக்கும் மேல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மனித உரிமையை மீறும் இந்த விவகாரம் தொடர்பாக, ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் மாநில சட்ட சேவை ஆணையம்/உயர் நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். -பிடிஐ

Google+LinkedinYoutube