கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எடியூரப்பா, குமாரசாமி கடிதம் : தனிப்பெரும் கட்சியாக பாஜக அபார வெற்றி

கர்நாடகாவில் புதிய ஆட்சியமைக்க உரிமை கோரி பாஜக தரப் பில் எடியூரப்பாவும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கூட்டணி சார்பில் குமாரசாமியும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தள தலை வர் தேவகவுடா ஆகியோர் மாநி லம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தனர். கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஜெயநகர் தொகுதியிலும் ராஜராஜேஸ்வரி தொகுதியிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா வெற்றி

தேர்தல் நடந்த 222 தொகுதிக ளில் மொத்தம் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 75 ஆயி ரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 38 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முன்னிலை விவரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட்டன.

இதில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்தது. எனினும் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. அந்த கட்சி 104 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக அபார வெற்றி பெற் றது.

கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஷிகாரிபுரா தொகுதியில் 89,983 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கோனிக்கு 51,586 வாக்குகளும் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் பலேகருக்கு 13,191 வாக்குகளும் கிடைத்தன.

சித்தராமையா தோல்வி

மொத்தம் 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. முதல்வர் சித்தராமையா, பாதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பாதாமி தொகுதியில் 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவர் வெற்றி பெற்றார். அவருக்கு 67,599 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் ஸ்ரீராமலு 65,903 வாக்குகளும் ஜேடிஎஸ் வேட்பாளர் ஹனமந்த் 24,484 வாக்குகளும் பெற்றனர்.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா தோல்வியைத் தழுவினார். அந்த தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் ஜி.டி.தேவகவுடா 1,21,325 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். சித்தராமையாவுக்கு 85,283 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் கோபால் ராவ் 12,064 வாக்குகள் பெற்றார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் மொத்தம் 199 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி, சென்னபட்னா, ராம்நகர் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. கர்நாடக பிரக்யானந்த ஜனதா கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது.

திடீர் திருப்பம்

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டபோதே மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன், காங்கிரஸ் திரைமறைவு பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு வந்ததாக கூறப் படுகிறது.

தேர்தல் முடிவுகள் தெளிவான நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடாவை தொலைபேசி யில் அழைத்து பேசினார். அப் போது ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆதரவை தேவகவுடா ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து தேவ கவுடாவின் மகனும் மஜத தலைவருமான குமாரசாமி நேற்று ஆளு நர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முதல்வர் சித்தராமையா ஆகியோரும் சென்றனர்.

முன்னதாக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் மத்திய அமைச்சர் அனந்த குமார் உள்ளிட்டோர் சென்றனர்.

ஆளுநரின் முடிவு என்ன?

ஆளுநரின் முடிவுக்காக குமாரசாமியும் எடியூரப்பாவும் காத்திருக்கின்றனர். அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆந்திரா அல்லது பஞ்சாபுக்கு அழைத்துச் செல்ல கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது

Google+ Linkedin Youtube