மதச்சார்புள்ள ஆட்சியை அகற்றிட தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மதச்சார்புள்ள ஆட்சியை அப் புறப்படுத்த தேசிய அளவில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

மதச்சார்புள்ள ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமெனில், அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே அது பயனளிக்கும் என்பதை கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது.

மதச்சார்பற்ற அரசியல் தலைவர்களை ஒன்றிணைக்க திமுக முயற்சிக்குமா என்பதை தேர்தல் வரும் நேரத்தில் கண்கூடாக நீங்கள் பார்ப்பீர்கள். காவிரி நீர் 29-ம் தேதி வரும், 30-ம் தேதி வரும், கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் வரும் என்று தமிழக முதல்வரும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

எனினும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்கி, இரு மாநில நட்புணர்வை வளர்க்கும் முயற்சியில், புதிதாக பொறுப்பேற்கவுள்ள கர்நாடக அரசு ஈடுபட வேண்டும்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, காவிரி பிரச்சினைக்காக பலமுறை அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, அனைவரின் கருத்துகளை கேட்டறிந்து, அரசு தலைமை வழக்கறிஞரிடம் விவாதித்து, அதன் பிறகே நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாட்டை எடுத்து வைத்திருக்கிறார்.

எனவே, அந்த அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றத்தில் எந்தவிதமான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளை அழைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Google+LinkedinYoutube