மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் மே 20-ல் ஆலோசனை நடத்த உள்ளார்

ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணிச் செயலாளர்களை ரஜினிகாந்த் வரும் 20-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்தார். இதுவரை சுமார் 8,500 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள் ளனர்.

நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில், அணி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, மாவட்டச் செயலாளர்களை கடந்த 10-ம் தேதியும், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்களை 13-ம் தேதியும் சந்தித்துப் பேசினார். மன்றத்தில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிலையில், மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களை ரஜினி வரும் 20-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களையும் ரஜினிகாந்த் வரும் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு சந்திக்க உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பும் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்திலேயே நடக்கும் என்று கூறப்படுகிறது.

Google+ Linkedin Youtube