சர்வாதிகார ஆட்சி; பாகிஸ்தான் போல் இருக்கிறது: ராகுல் காந்தி ஆவேசம்

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதுபோன்ற அச்சம் நிலவுகிறது, பாகிஸ்தானைப் போல் சூழல் இருக்கிறது, அரசியல் சாசன அமைப்புகள் எல்லாம் தாக்குதலுக்கு ஆளாகின்றன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதையடுத்து, 104 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் அனுமதி கோரியது. அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரியது.

 

இந்த சூழலில், ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார். அவரின் அழைப்பைத் தொடர்ந்து இன்று காலை முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விதான் சவுதா அருகே காந்திசிலை முன் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சட்டீஸ்கர் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜன் ஸ்வராஜ் சம்மேளன் எனும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சுயாட்சி அதிகாரம் அளிக்கப்பட்ட 75 ஆண்டு விழா நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கர்நாடக்தில் எம்எல்ஏக்கள் ஒருபக்கம் இருக்கிறார்கள், நடுநிலை வகிக்க வேண்டிய ஆளுநர் வேறு ஒருபக்கம் இருக்கிறார். அங்கு என்ன மாதிரியான முயற்சிகள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டின் அரசியல் சாசனத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்தி வருகிறது.

பெரும்பான்மை பலம் இல்லாத பாஜக, எம்எல்ஏக்களை பிரிப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி வருகிறது. பாஜக ஊழல் பற்றி பேச விரும்பினால், ரஃபேல் போர்விமான ஊழல் குறித்து பேசட்டும், பாஜக தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா குறித்தும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிறுவனம் குறித்தும் பேசட்டும்.

எடியூரப்பா முதல்வரானதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று பெங்களூருவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

 

நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கபளீகரம் செய்து வருகிறது. எம்.பி., எம்எல்ஏக்கள், ஊடகங்கள், திட்டக்குழு அனைத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. அனைத்து ஜனநாயக அமைப்புகளும் நாட்டின் ஒரே குரலாக ஒலித்து வருகின்றன, ஆனால், அதன் குரல்வளையை நெறிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியும் நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது. ஆனால், இதுபோல் ஒருமுறைகூட ஜனநாயக அமைப்புகளைக் கைப்பற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை. நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது, ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன. பாஜக எம்.பி.க்கள் கூட நாடாளுமன்றத்தில் மோடியின் முன் பேசுவதற்கு அச்சப்படுகிறார்கள்.

கடந்த 70 ஆண்டுகளில், மக்கள்தான் நீதித்துறையை அணுகி நீதிகேட்டு வந்துள்ளார்கள். ஆனால், வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர், மக்களைச் சந்தித்து நீதி கேட்டார்கள். தங்கள் பணியைச் செய்ய அனுமதிக்கவில்லை எனப் புகார் தெரிவித்தனர். நாட்டிலேயே இதுதான் முதல்முறையாக இப்படி நடந்தது.

இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் சர்வாதிகார ஆட்சியில்தான் நடக்கும். பாகிஸ்தானிலும், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளிலும்தான் இதுபோன்ற அடக்குமுறைகள் நடக்கும்.

ஒரு சர்வாதிகாரி வந்தவுடன், நீதித்துறையையும், ஊடகங்களையும் அடக்கி ஒடுக்கிவிடுவார். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் முதல்முறையாக இதுபோன்று நடக்கிறது. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்த 70 ஆண்டுகளில் இதுபோன்று பார்த்தது உண்டா?

தலித்துகள், பழங்குடியின மக்களின் குரல்களையும், பெண்களையும் அடக்கி ஒடுக்க ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் முயல்கிறது. நாட்டின் செல்வங்களை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பகிர்ந்தளிக்க முயல்கிறது. விவசாயிகள் கடன்தள்ளுபடி கேட்டால், அப்படிப்பட்ட கொள்கையே மத்திய அரசிடம் இல்லை என்கிறார் நிதி அமைச்சர் ஜேட்லி. ஆனால், கடந்த ஒரு ஆண்டில் ரூ.2.50 லட்சம் கோடி கடனை 15 பணக்காரர்களுக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.''

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Google+ Linkedin Youtube