கர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு : களத்தில் குதித்த ராம்ஜெத் மலானி

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க, ஆளுநர் முடிவுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்..

ஒட்டுமொத்த அரசியலமைப்பு அதிகாரத்தையே கர்நாடக ஆளுநர் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று ராம்ஜெத் மலானி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

 

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது. அதேசமயம், 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தனர்.

இந்தப் பரபரப்பான சூழலில் ஆளுநர் வாஜுபாய் வியாழக்கிழமை முதல்வராகப் பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு நேற்று இரவு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவை நிறுத்திவைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில், இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா இன்று மாநிலத்தின் 23-வது முதல்வராகப் பொறுப்பேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் வாஜுபாய் வாலா அளித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றம்

அந்த மனுவில் ராம்ஜெத் மலானி  கூறியிருப்பதாவது:

''கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதன் மூலம் அரசியலமைப்புச்சட்டம் அவருக்கு வழங்கியுள்ள ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவரின் பதவிக்கும், அவர் சார்ந்திருக்கும் அலுவலகத்துக்கும் அவமரியாதையைத் தேடிக் கொடுத்துள்ளார்.''

இவ்வாறு ராம்ஜெத் மலானி தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் அவசர வழக்காக விசாரிக்க ராம்ஜெத் மலானி தரப்பில் கோரப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிரான காங்கிரஸ், ஜேடிஎஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று அதிகாலை விசாரித்துள்ளது. அந்த வழக்கு மீண்டும் 18-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அத்துடன் சேர்த்து இந்த வழக்கைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்கள்.

இந்த மனு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறுகையில், ''நான் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ இந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லை. மாநில ஆளுநர் எடுத்த முடிவு அரசியலமைப்புச்சட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால் இதைத் தாக்கல் செய்தேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

Google+LinkedinYoutube