சதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததால் புரோகிதர் கைது செய்யப்பட்டார்; பாம்பாட்டிக்கு வலை

கடலூரில் ஒரு தம்பதியினரின் சதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததாக புரோகிதர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பாம்பாட்டி தலைமறைவாகி விட்டார்.

கடலூர் துரைசாமி நகரில் வயதான தம்பதிகள் 80 வயதைக் கடந்ததற்கான விழாவை (சதாபிஷேகம்) சில நாட்களுக்கு முன் கொண்டாடினர். அப்போது அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலானது. அதில் சதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்யும் 10 நிமிடத்திற்கும் மேலான காட்சி இடம்பெற்றிருந்தது.

அந்தக்காட்சியில் புரோகிதர் ஒருவர் அமர்ந்திருப்பார் அவருக்கு சற்று தள்ளி வயதான தம்பதியினர் மாலை போட்டு நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருப்பார்கள். புரோகிதருக்கு அருகில் நல்ல பாம்பு ஒன்று சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு படமெடுத்தபடி நிற்கும்.

அதைச் சுற்றிலும் நிற்கும் உறவினர்கள் பயந்தபடி பார்த்து நிற்பார்கள். புரோகிதருக்கு எதிரே பாம்பாட்டி மகுடி மற்றும் கூடையுடன் அமர்ந்திருப்பார். அவர் பாம்பைக் கண்காணித்தபடி இருப்பார்.

புரோகிதர் பாம்பைப் பார்த்தபடி நாகராஜாவாக பாவித்து மந்திரம் சொல்லச்சொல்ல பாம்பு அவரை நோக்கித் திரும்பும். புரோகிதர் கண்ணில் கலவரம் தெரிந்தாலும் பாம்பாட்டி பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் பூஜை செய்தபடி மந்திரங்களைச் சொல்லியபடி தன் முன் இருக்கும் கூடையில் பூக்களைப் போட்டபடி இருப்பார்.

பாம்பு புரோகிதரைப் பார்த்து கொத்த குறிவைக்கும் தருணத்தில் பாம்பாட்டி இடையில் கையைக் காட்டி பாம்பின் கவனத்தைத் தம் பக்கம் இழுப்பார். புரோகிதர் பூஜை செய்தபடி பாம்பை நோக்கி மந்திரம் கூறியவாரே பூ, வாழைப்பழம், கமண்டலத்திலிருக்கும் நீரைக் கூடையில் தெளிப்பார்.

இதற்கிடையே பாம்பு மீண்டும் புரோகிதரை நோக்கித் திரும்ப, அதன் கவனத்தை பாம்பாட்டி திருப்ப, தன் கையைக் கொண்டுசெல்வார். அப்போது பாம்பு ஆவேசத்துடன் அவரைக் கொத்தும், இதை உறவினர்கள் கலவரத்துடன் பார்ப்பார்கள்.

உயிரை அச்சுறுத்தும் இந்தப் பூஜை செய்ததைப் பார்த்த சிலர் வீடியோவை வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறை சட்டத்திற்கு எதிராக பாம்பை வைத்துப் பூஜை செய்த புரோகிதர் யார் என கடலூர் வனத்துறையினர் விசாரிக்க பூஜை செய்தது கடலூர் ஆணைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த புரோகிதர் சுந்தரேசன் (45) என தெரிய வந்தது. உடனடியாக அவரை கடலூர் மாவட்ட வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே பூஜைக்காக நல்ல பாம்பை கொண்டு வந்த பாம்பாட்டியை வனத்துறையினர் தேடி வரும் நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார்.

Google+ Linkedin Youtube