திமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

திமுகவில் இருந்தபோது குஷ்பு நாகரிகமாக நடத்தப்பட்டதாகவும், அவருக்கு எதிராக தரக்குறைவான நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட்டதில்லை எனவும், திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார்.

இந்தக் கூட்டம் குறித்து இன்று (வியாழக்கிழமை) நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதில், திருநாவுக்கரசர் கூட்டத்தில், “குஷ்பு திமுகவில் இருந்தபோது அவர் ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது தமிழக மக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் தெரியும். குஷ்புவை திமுக தொண்டர்கள் முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்த நிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நிலையை குஷ்பு உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.

திமுகவில் குஷ்பு பேச்சாளராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். அப்போது தான் குஷ்பு கட்சியிலிருந்து  வெளியேற்றப்பட்டார். அவர் கூறிய கருத்துகள் திமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதை தமிழக மக்களும் திமுகவினரும் மறக்கவில்லை” என்று திருநாவுக்கரசர் பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இச்செய்தி தொடர்பாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முட்டை, செருப்பால் அடித்து திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

திமுகவில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார். திமுகவினர் யாரும் குஷ்புவுக்கு எதிராக, இதுபோன்று தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுமில்லை, தாக்கவுமில்லை. இந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube