கமல்ஹாசன் கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்

சென்னை காவிரி பிரச்சினை சம்பந்தமாக கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என 9 கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி பிரச்சினை சம்பந்தமாக நடிகர் கமல்ஹாசனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த கேட்டுக்கொண்டனர். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து வரும் 19-ம் தேதி தாம் கூட்டவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார்.

தங்கள் அணியில் உள்ள 9 கட்சிகளை கலந்து ஆலோசித்துவிட்டுச் சொல்வதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கமல்ஹாசன் இந்தக் கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்கப்போவதாகத் தெரிவித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்தையும் அழைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கமல் கூட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பில் ஸ்டாலின்  கூறியதாவது:

காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக அறிக்கை தாக்கல் செய்துள்ளதே?

ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். முழு விவரம் வரவில்லை. விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சினையில் முழு விவரம் வந்த பிறகு தெரிவிக்கிறேன்.

கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது பற்றி?

ஏற்கெனவே தமிழகத்தில் மோடி, இங்குள்ள ஆளுநரை, ஆளுநர் அலுவலகத்தை எந்த அளவுக்கு பயன்படுத்தி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் என்பது நாடறிந்த உண்மை. அதே நிலையை கர்நாடகத்திலும் அரங்கேற்றியுள்ளார் மோடி. இது சட்ட விதிக்கு விரோதமானது, ஜனநாயகத்தை பிரதமர் மோடி தொடர்ந்து படுகொலை செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு, கர்நாடக ஆளுநர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக இது ஊரறிந்த உண்மை. ஏற்கெனவே தமிழ்நாடு பார்த்து வருகிறது. தற்போது கர்நாடகாவும் பார்க்கிறது. தொடர்ந்து பல மாநிலங்களும் பார்க்கப் போகிறது. இது ஊரறிந்த உண்மை.

கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றி முடிவெடுத்து விட்டீர்களா?

இன்று அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதுபற்றி பேசி முடிவெடுக்க இருந்தோம், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் போனில் பேசினேன். அவர்கள் எடுத்த முடிவுப்படி கமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என 9 கட்சித் தலைவர்களும் முடிவெடுத்துள்ளோம்.

ஆகவே கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 9 கட்சித்தலைவர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube