ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும் கலவரத்துக்கும் திமுகவே காரணம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுகவும், அக்கட்சியின் எம்எல்ஏ கீதா ஜீவனும் காரணம். திமுக செய்த தவறை மறைப்பதற்காகவே, மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, நடைபெற்ற சம்பவங்கள் குறித்த விளக்க அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். தடுப்புகளை மீறி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் கூடிய புகைப்படத்தைக் காண்பித்தார்.

பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, ''ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது திமுகதான். ஆலை இயங்கக்கூடாது என்று முயற்சி எடுத்தவர் ஜெயலலிதா.

99 நாட்கள் மக்கள் அமைதியாகப் போராட்டம் நடத்தினார்கள், அப்போதெல்லாம் அமைதியாக இருந்த போராட்டம் 100-வது நாள் பேரணியில் தான் கலவரமாக மாறியது. போராட்டத்தில் சில சமூக விரோத சக்திகள், அரசியல் கட்சிகள் ஊடுருவியதால் தான் பிரச்சினை ஏற்பட்டது. ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் தான்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுகவே காரணம். திமுக செய்த தவறை மறைப்பதற்காகவே, மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுக்கிறார்'' என்றார்.

முதல்வர் பழனிசாமி டிவியைப் பார்த்துதான் துப்பாக்கிச் சூடு  குறித்து தெரிந்துகொண்டேன் என்று கூறியதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சம்பவம் நடந்த அன்று நான் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் இருந்தேன். அதன் பின்னர் கூட்டம் முடிந்த பின்னர்தான் துப்பாக்கிச் சூடு பற்றி தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube