2014-ல் காணாமல்போன எம்.எச்-370 மலேசிய விமானம் தேடும் பணி நிறுத்தம்

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானம் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அமெரிக்காவின் ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.


கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி மலேசியாவிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட  எம்.எச்-370 விமானம்  புறப்பட்ட சில மணி நேரத்தில் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து  சர்வதேச அளவில் மிகப் பெரிய நாடுகளும் கடற்படைகளும், விமானப் படைகளும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என்ற உறுதியான தகவலும் இதுவரை தெரியவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை ஏதும் வெளியாகததால் விமானத்தை கண்டுபிடிப்பது மிகுந்த சிரமத்துக்குள்ளாகியது.

இந்த நிலையில் எம்.எச்-370 விமானம் கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலுள் விழுந்திருக்கலாம் என்று 2016 ஆம் ஆண்டு கூறப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து விமானத்தின் இறக்கைகளும் கைப்பற்றப்பட்டன. எனினும் விமானத்தைக் கண்டறிய முடியவில்லை.

எம்.எச்-370 விமானத்தைக் கண்டுபிடிப்பது சிரமமானது என்று  தேடுதலில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, மலேசிய, சீன அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர். 

இதனைத் தொடர்ந்து  விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனம் தற்போது தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

காணாமல் போன எம்.எச்-370 விமானத்தில் சுமார் 239 பேர் பயணம் செய்திருந்தனர். இவர்களின் நிலைமை என்னவென்பது நான்கு ஆண்டு கழித்து அறியப்படாதது மலேசிய  மக்களிடத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google+ Linkedin Youtube