தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு ஆபத்து: தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா எச்சரிக்கை

மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய சுயநலத்துக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்கிறது. தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் 4 மக்களவைத் தொகுதிகள், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலின் போது கர்நாடக, மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை செய்து தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏதேச்’சதி’கார மனப்பான்மையுடன் செயல்பட்டு, தன்னுடைய சுயலாபத்துக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்கிறது. தேர்தலும், தேர்தல் ஆணையும் முறைகேடான உறவு வைக்கத் தொடங்கிவிட்டது.

நமது நாட்டில் ஜனநாயகம் நீண்ட நெடுங்காலமாக நீடித்து இருப்பதால்தான், உலகில் மிகப்பெரிய ஜனநாயகமாக இருக்கிறது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் ஜனநாயகம் சீரழிகிறது.

தற்போது தேர்தல் ஆணையமும், அதன் செயல்பாடுகளும் மத்திய அரசின் சேவகர்களாக செயல்படுகிறார்கள். தேர்தலில் மது, பணம் முறைகேடாகப் புழங்குகிறது என்று புகார் அளித்தாலும் அதைஏற்க தேர்தல் ஆணையம் தயங்குகிறது. இந்த ஏதேச்ச அதிகார அரசு, மிரட்டல் விடுகிக்கிறது.

அதிகமான வெயில் காரணமாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் பழுதாகின என்று தேர்தல் ஆணையம் காரணம் கூறுகிறது. காலநிலை அடிக்கடி மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், என்றாவது ஒருநாள் பிரதமர் மோடி பயணிக்கும் விமான இயந்திரங்கள் பழுதாகி இருக்கிறதா அல்லது வேலை செய்யாமல் இருந்திருக்கிறதா. கொடுமையான வெயில் காலத்திலும், பாஜகவின் சமூக ஊடகங்களின் கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து தவறுகள் செய்துகொண்டுதானே இருக்கின்றன.

வழக்கமாக மின்னணு எந்திரங்கள் பிஎச்இஎல் நிறுவனத்திடம் இருந்துதான் தேர்தல் ஆணையம் கொள்முதல் செய்யும். ஆனால், இந்த முறை, தனியார் நிறுவனத்திடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தல் ஆணையம் வாங்கி இருப்பது எங்களுக்குச் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும்.

இதே மின்னணு இயந்திரங்களை பாஜக எதிர்த்தது நினைவிருக்கும். இப்போது ஒட்டுமொத்த நாடே மின்னணு வாக்கு இயந்திரங்களை எதிர்க்கிறது. ஆனால், பாஜக அதை ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் மின்னணு வாக்கு எந்திரங்களை எதிர்க்கும் போது, ஏன் பாஜக அரசு மட்டும் ஆதரிக்கிறது.

இவ்வாறு சிவசேனா கட்சித் தெரிவித்துள்ளது.

Google+LinkedinYoutube