நீங்கள் யார்? என்று கேட்ட இளைஞர்; ஷாக்கான ரஜினி: தூத்துக்குடி சுவாரஸ்யம்

தூத்துக்குடிக்குச் செல்லும் விஐபிக்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சிக்கி சின்னாபின்னமாவது தொடர்கதையாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக சிக்கியவர் ரஜினி.

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா, உங்க பேரை ஒரு தரம் சொன்னால் நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்” என்று 1989-ல் வெளியான ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினிகாந்த் பற்றி வரும் ஒரு பாடல் பிரபலம்.

ஆனால் அந்தப் படம் வந்த போது பிறந்திராத இளைஞர் ஒருவர் இன்று ரஜினியைப் பார்த்து கேட்ட கேள்வி அந்தப் பாடலையே அர்த்தம் இல்லாமல் செய்து விட்டது. அவரது கேள்வி யார் நீங்கள், ரஜினியின் பதில் நான் ரஜினிகாந்த், அப்படியா என்று அந்த இளைஞர் சொன்ன ஒற்றை வார்த்தை ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு கிடைக்கும் ஒரு சிறிய அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளலாமா?

இல்லை என்பவர்கள் அடுத்து வரும் வரிகளைப் படிக்கும் போது மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். சமீபகாலமாக அரசியல் கட்சிகள் சடங்குப்பூர்வமாக மக்கள் பிரச்சினையை அணுகுவது வாடிக்கையாகி வருகிறது. பெரும் போராட்டம் நடத்தி மக்களைப் பாதிக்கும் பிரச்சினையில் அசைத்துப் பார்த்தார்கள் என்ற வரலாறு எந்த அரசியல் கட்சிக்கும் சமீபத்தில் இல்லை.

இதன் விளைவு அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் அனைத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. இதில் நியாயமாகப் போராடும் அரசியல் கட்சிகளும் அடித்துச் செல்லப்படுவதுதான் வேதனை. மற்றொரு புறம் போராட்டமே கூடாது என்ற மனோபாவமும் உருவாகி வருகிறது.

ஆனாலும் பிரச்சினை என்று வரும்போது மக்கள் தன்னெழுச்சியாக போராடித்தான் பல விஷயங்களை சாதிக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம், அதில் பங்கேற்றவர்கள் அரசியல் கட்சிகளை வெறுத்தார்கள், ஆனாலும் போராட்டத்தின் மூலமாகவே வெற்றி சாத்தியமானது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டமும் அவ்வாறே வென்றது.

அடுத்த போராட்டம் ஸ்டெர்லைட் போராட்டம், 100 நாட்களை கடந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளை இணைக்க மக்கள் விரும்பவில்லை. ஆனாலும் அனைத்துக் கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்தன. இன்னொரு புறம் அரசியலுக்கு வரும் நடிகர்கள் பற்றிய மக்களின் பார்வை.

மக்களின் பார்வை வேறு, ரசிகனின் பார்வை வேறு என்பதை உணராமல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் எம்ஜிஆர் போல் தனக்கு வெற்றி கிட்டும் என்ற ஆசையுடன் வருகின்றனர். எம்ஜிஆர் 60-களில் நேரடி அரசியலுக்கு வந்தார். 1962,1967, 1971 திமுகவுக்காக தமிழகம் முழுவதும் சுற்றிப் பிரச்சாரம் செய்தார்.

இதில் 1967, 71 இரண்டு தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு தானும் ஒருவகையில் காரணமாக இருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக வருவதற்கு பெரும்பங்காற்றியவர் என்ற நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உண்டு.

அந்த காலகட்டங்களில் அவர் முதல்வராக ஆசைப்படவில்லை. அதிகபட்சம் சுகாதாரத்துறை அமைச்சராக ஆசைப்பட்டதாகக் கூறுவார்கள். அதன் பின்னர் திரைத்துறையிலிருந்து வந்த ஜெயலலிதாவும் 1982-ல் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு அந்த ஆண்டே ராஜ்ய சபா உறுப்பினர். பின்னர், 1984 தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றிக்காக சுற்றுப்பயணம், 1987 வரை அசுர வளர்ச்சி என அதிமுகவில் ஸ்தாபன ரீதியாக வலுவாக தளம் அமைத்துக்கொண்டார்.

ஆனால் ஜெயலலிதா மறைவு வரை அரசியல் பற்றியே பேசக்கூட துணியாத ரஜினி, கமல் இருவரும் அதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி அரசியலுக்கு வர காலடி வைத்துள்ளனர். கமல் கட்சியை ஆரம்பித்து சுற்றுப்பயணமும் போய் வருகிறார். பிரச்சினைகளை அணுகுவதில் கமல் ஓரளவு வெற்றி கண்டுள்ளார். தேசியத் தலைவர்களுடன் அணுகும் முறையையும் கற்று வருகிறார்.

ஆனால் ஜெயலலிதா மறைவால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது அதை நிரப்பவே நான் வந்தேன் என்கிற ரீதியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசினார். அவரது அரசியல் கொள்கை என்னவென்று இதுவரை கூறாத நிலையில் ஆன்மிக அரசியலே எனது அரசியல் என்று மட்டும் தெரிவித்தார். அரசியலுக்கு வருவது வேறு, முதல்வர் பதவியைக் குறிவைத்து வருவது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் எம்ஜிஆர் அரசியல், ரஜினி அரசியல்.

நடிகர்கள் பதவிக்காகத்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்று நம்பும் காலகட்டத்தில் அனைத்தையும் விமர்சிக்கும் நெட்டிசன்கள் காலம் இது. இந்த நேரத்தில் மக்களுடைய போராட்டத்தில் பங்கேற்றாலே ஆதாயத்தோடு தான் வருகிறார்கள் என்று எண்ணும் மனப்போக்கு உள்ள காலம் இது.

போராட்டம் என்ற வார்த்தையே அறவே பிடிக்காது என்ற கொள்கை உடைய ரஜினிகாந்த் போராட்டம் துப்பாக்கிச் சூடாக மாறிய பின்னர் அதில் உயிரிழப்பும் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களை அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் போய் பார்த்து ஆறுதல் கூறிய பின்னர் தாமதமாகவே ரஜினி சென்றுள்ளார்.

ஏற்கெனவே அமைச்சர்களை கேள்வி கேட்டு துளைத்தெடுத்த, பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்துக்கு ரஜினியும் தப்பவில்லை என்பதற்கு உதாரணமே இன்றைய சம்பவம். இதன் பின்னராவது ரஜினி மாறினாரா என்றால் அரசாங்கத்தின் குரலையே அவரும் கூறிவிட்டுச் சென்றார்.

போராடிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் குறித்த கடும் விமர்சனம் எழுந்த நிலையில் போராட்டமே கூடாது என்ற மனோபாவமும், போலீஸாரை சமூக விரோதிகள் தாக்கினார்கள், போலீஸாரை தாக்கினால் விடக்கூடாது என்று பேசுவதும் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்த ரஜினியின் பார்வையை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.

ஐபிஎல் விவகாரத்திலும் தடியடியை நியாயப்படுத்தி ரஜினி பதிவிட்டதை சிலர் ரசித்திருக்கலாம் ஆனால் பெரும்பாலானோர் கருத்துக்கு எதிரான கருத்தாகவே அது அமைந்தது. ஸ்டெர்லைட் விவகாரத்திலும் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் அரசின் குரலாகவும், அரசை ஆதரிக்கும் சிலரின் குரலோடும் ரஜினியின் குரல் ஒலித்துள்ளது.

பின்னர் எப்படி மக்கள் பக்கம் அவர் நெருங்க முடியும்?

காயம்பட்ட இளைஞரை ரஜினி சந்தித்த அந்தத் தருணம்:

கலவரத்தில் காயப்பட்ட இளைஞர் ரஜினியைப் பார்த்து

எந்த ஒரு பரபரப்புமின்றி மெல்ல எழுகிறார்:

ரஜினி அவரைப்பார்த்து சிரித்தபடி கை கொடுக்கிறார்.

இளைஞர்: (ரஜினியைப் பார்த்து) யாரு நீங்க?

ரஜினி: நான் தான் ரஜினிகாந்த்

இளைஞர் : அது தெரியுது அது தெரியாமையா?

ரஜினி: சரிங்க சரிங்க (சிரித்தவாறு)

இளைஞர் : நூறு நாள் போராடினோமே அப்ப நீங்க வரலையே... நீங்க தான் ரஜினிகாந்துன்னு தெரியாதா?

ரஜினி: மீண்டும் சிரித்தவாறு... " சரிங்க சரிங்க" என கைகூப்பிச் செல்கிறார்.

ரஜினியை கேள்விகேட்ட இளைஞர் பெயர் சந்தோஷ், மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர், கல்லூரி மாணவர் என்பதும் ரஜினியின் “சூப்பர் ஸ்டாரு பாடல்” ஒலித்த படமான ‘ராஜா சின்ன ரோஜா’ வெளிவந்து சுமார் பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

Google+ Linkedin Youtube