வில்லிவாக்கத்தில் பரிதாபம்: உடற்பயிற்சியின்போது தலையில் தம்புல்ஸ் விழுந்து மாணவன் பலி

வில்லிவாக்கத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் தம்புல்ஸை வைத்துப் பயிற்சி செய்த போது அது தலையில் விழுந்ததால் காயமடைந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (45) இவரது மனைவி வசந்தா புஷ்பலதா (40). சுரேஷ் மின் வாரியத்தில் பணியாற்றுகிறார். இவரது மகன் மோகன் (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிந்து சில நாட்களுக்கு முன் வெளியான தேர்வு முடிவில் தேர்ச்சியடைந்து 11-ம் வகுப்புக்குச் செல்ல இருந்தார்.

மோகனுக்கு உடற்பயிற்சியில் ஆர்வம். சிறுவயதிலிருந்தே பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பெற்றோரிடம் அனுமதி கேட்க பெற்றோரும் இசைவு தெரிவித்ததின் பேரில் வில்லிவாக்கம் நாதமுனியில் உள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தார்.

தினமும் தவறாது உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்ற மோகன் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது கைகளை வலுவாக்க பெஞ்சில் படுத்துக்கொண்டு இரண்டு இரும்பு தம்புல்ஸ்களை கையில் வைத்துக்கொண்டு படுத்தபடி பயிற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு தம்புல்ஸ் நழுவி மோகனின் முகத்தின் மீது விழுந்துள்ளது. இதில் நெற்றியில் பலத்த காயமடைந்த மோகன் மயங்கி விழுந்தார். உடனடியாக ஜிம்மில் இருந்தவர்கள் அவரை கீழ்ப்பக்கம் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வில்லிவாக்கம் போலீஸார் உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர் வினோத், பயிற்றுநர் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனை உடற்பயிற்சி செய்ய அனுப்ப மனமில்லாத நிலையில் அவனுடைய ஆர்வமும் தொடர் வற்புறுத்தல் காரணமாகவே அனுப்பியதாக உயிரிழந்த மோகனின் தாயார் அழுதபடி தெரிவித்தார்.

உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் அவசியம், அதை சரியான வயதில் செய்வதும் தகுந்த பயிற்சியாளரை வைத்து செய்வதும் மிகவும் முக்கியம். சென்னையில் சமீபகாலமாக புற்றீசல் போல் உடற்பயிற்சிக் கூடங்கள் முளைப்பதும், பணத்திற்காக பேக்கேஜ் என்று வருபவர்களை எல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் சேர்ப்பதும் வாடிக்கையாகி வருகிறது. சிறுவர்களுக்க்கு என்று தனியாகப் பயிற்சியும், அதற்காக பிரத்யேகப் பயிற்சியாளர்களும் இருப்பது அவசியம். இதை கடைபிடிக்காததன் விளைவால் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube