வடகொரிய அதிகாரிகள் அமெரிக்காவில் முகாம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இதையொட்டி வடகொரியாவின் மூத்த அதிகாரிகள் அமெரிக்காவில் முகாமிட்டு ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது. வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்தன. தென்கொரியாவின் முயற்சியால் தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை இருமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் சந்திப்பை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். திட்டமிட்டபடி இரு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பாக இருநாடுகளுக்கும் இடையே ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

வடகொரியாவின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மற்றும் சிங்கப்பூரில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வடகொரிய அதிபர் கிம்மின் வலது கரமாக கருதப்படும் மூத்த அதிகாரி கிம் யாங் சோல் அமெரிக்கா செல்வதற்காக நேற்று பெய்ஜிங் சென்றார். அங்கிருந்து அவர் இன்று அமெரிக்கா செல்கிறார்.

Google+ Linkedin Youtube