காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்தார்.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதித்தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம்எனச் சொல்லப்படும் வரைவு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் எனத் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி கடந்த மாதம் 14-ம் தேதி 14 பக்க வரைவு செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யக் கோரி இருந்தன. அதன்படி திருத்தங்கள் செய்து 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.

அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும், அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு பதிலாக, கடந்த 29-ம் தேதியே முன்கூட்டியே தொடங்கியது. ஆனால், காவிரி ஆணையம் குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு தாமதித்தது. இதனால்,விவசாயிகள் தரப்பில் மீண்டும் அதிருப்தி ஏற்பட்டு, அடுத்த கட்ட போராட்டம் நடத்தும் சூழல் நிலவியது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கையொப்பம் இட்டுள்ளதாகவும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube