தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4-ம் தேதி விசாரணையை தொடங்குகிறார் நீதிபதி அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அருணா ஜெகதீசன் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்கிறார். தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்குகிறார். தமிழக அரசு தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மக்களின் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனை அடுத்து ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டதை அடுத்து விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube