திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும்: ஸ்டாலின் பேட்டி

திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில், தலைவர் கருணாநிதியின் 95-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் எழுச்சியோடு கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவதாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமித்து, விவசாயப் பாசனத் தேவைகளை நிறைவேற்ற ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து விட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூன்றாவதாக, நேற்று திருவாரூரில் நடைபெற்ற தலைவர் கருணாநிதியின் 95 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில், அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பேசியபோது, சட்டப்பேரவையைப் புறக்கணிக்கக்கூடாது, திமுக சட்டப்பேரவைக்குள் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டுமென்று எடுத்து வைத்த வேண்டுகோள் குறித்து, திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் எடுத்துரைத்து, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, அதன்படி வருகின்ற திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்க உள்ளது.

அன்றைன்றைக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகள், தமிழ்நாட்டை மையம் கொண்டுள்ள முக்கியமான பிரச்சினைகளை எல்லாம் நாங்கள் சட்டப்பேரவையில் எதிரொலிப்போம்.

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களாக பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் திருச்சி நீர்வளத்துறை பொறியாளரையும் நியமித்து இருக்கிறார்கள்.

ஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணையைத் திறக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். அதற்கான அழுத்தம் தருவதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.''

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த அறிக்கையில் துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையே இல்லை.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும். அதுவரை சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் திமுக புறக்கணிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவை கூட்டத் தொடரை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

பேரவைக் கூட்டத்தில் திமுக மீண்டும் பங்கேற்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கேட்டுக் கொண்ட நிலையில், திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube