சிங்கப்பூரில் ரூபே கார்டு மூலம் மதுபானி ஓவியம் வாங்கிய பிரதமர் மோடி

சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள லிட்டில் இந்தியாவில் ரூபே கார்டை பயன்படுத்தி மதுபானி ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூருக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மலேசியாவில் இருந்து நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு மோடி சென்றார். அங்கு நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கும் சந்தித்து பேசினர்.

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பெருமளவு பயன்பெறும் வகையில் அந்நாட்டில் ‘பீம், ரூபே மற்றும் எஸ்பிஐ (BHIM, RuPay, SBI) ஆப்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்கு விரைவாக பணத்தை அனுப்பி வைக்க முடியும். அதுபோலவே வர்த்தக பயன்பாட்டிற்கும் இந்த செயலியை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பணம் செலுத்துவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று வழிபாடு நடத்தினார். அவரை கோயில் நிர்வாகிகளும், அதிகாரிகளும் வரவேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடிக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

பின்னர் லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த கடை ஒன்றில் அழகிய மதுபானி ஓவியம் ஒன்றை வாங்கினார். இதற்கான தொகையை ரூபே கார்டு மூலம் அவர் செலுத்தினார். பின்னர் இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘இந்திய கலாச்சார மையத்தில் ரூபே கார்டை பயன்படுத்தி ஓவியம் ஒன்றை வாங்கினேன். இதுபோன்ற பண பரிவர்த்தனையின் மூலம் சிங்கப்பூர் - இந்தியா இடையிலான வர்த்தக உறவு மேலும் அதிகரிக்கும்’’ எனக் கூறியுள்ளார்.

Google+LinkedinYoutube