எதிரணிகளுக்கு ஏராளமான ‘ஹார்ட் அட்டாக்’குகளை கொடுத்தவர் தோனி: கே.எல்.ராகுல் புகழாரம்

தனது அதிரடியான ஷாட்கள் மூலமும், சிக்ஸர்கள் மூலமும் எதிரணிகளுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தியவர் தோனி என்று கே.எல்.ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த கே.எல். ராகுல், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய மிகச்சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், 659 ரன்கள் குவித்தார், அதிகமான சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.

   

கடந்த ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த கே.எல்.ராகுல், அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும், ரூ.11.5 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் விலைக்கு வாங்கப்பட்டார்.

சமீபத்தில் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தோனியின் பேட்டிங்கை ரசித்தது குறித்து கே.எல். ராகுல் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்தே தோனி பேட்டிங்கை தொலைக்காட்சியில் விரும்பிப் பார்ப்பேன். அவரின் ஒவ்வொரு ஷாட்டும் எதிரணிக்குப் பயத்தை ஏற்படுத்தும். தோனியின் பேட்டிங்கும், அவர் விளையாடி அணியை வெல்ல வைக்கும் காட்சியும் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகப் பார்ப்பதும், ஐபிஎல் போட்டியை அவர் தலைமையிலான அணி வென்றதையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


 

தோனியை ஒரு தனி மனிதராகவும், அணியின் கேப்டனாகவும் குறித்து பேசுவதற்குப் பெருமையாக இருக்கிறது. அதிலும் அவர் போட்டிகளில் அடிக்கும் சிக்ஸர்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். தோனி அடிக்கும் ஷாட்களும், சிக்ஸர்களும் பல நேரங்களில் எதிரணிக்கு ஏராளமான 'ஹார்ட் அட்டாக்' வரவழைத்து இருக்கும். இதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

பெங்களூரு அணியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மாறியது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. புதிய கேப்டன் அஸ்வின் நடுநிலையாகச் செல்லக்கூடியவர். தோல்வி அடைந்தாலும், வெற்றி பெற்றாலும் எப்போதுமே நிலை மாறாமல் செயல்படுவார். பந்துவீச்சாளர்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் அஸ்வின் செயல்படுவார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகச்சிறந்த அனுபவமாகவும் அமைந்தது.

கிறிஸ்கெயில் மைதானத்துக்கு வெளியே மிகச்சிறந்த நண்பர், அவருடன் இருந்தால் நேரம் செல்வதே தெரியாது. கெயில் அதிரடியாக ஆடத் தொடங்கிவிட்டால், அன்றைய போட்டியில் வெற்றி உறுதி. இந்த ஆண்டு கெயில் விளையாடிய விதத்தைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது. 

ஒவ்வொரு பந்தையும் வீணடிக்கக் கூடாது, ரன்களைச் சேர்க்க வேண்டும் என்ற பசியோடு இருப்பவர் கெயில். பெங்களூரு அணியில்நான் இருந்ததில் இருந்து கெயிலுடனான நட்பு எனக்குத் தொடர்ந்து வருகிறது. பவர்ப்ளே ஓவரில், கெயிலின் ஆட்டமும், என்னுடைய பேட்டிங்கும் எத்திரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என நினைக்கிறேன்.''

இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube