2 நாட்கள் ஆளுநர்கள் மாநாடு: டெல்லியில் நாளை தொடக்கம்

டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர்களின் 2 நாள் மாநாடு நாளை (2.6.2018) தொடங்குகிறது. இதில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் டெல்லி சென்றார்.

இந்த மாநாட்டில், தூய்மை இந்தியா மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த மாநாடு குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கிறது.

49--வது முறையாக இதுபோன்ற ஆளுநர் மாநாடு நடக்கிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை ஏற்கும் 2--வது மாநாடாகும். கடந்த 1949-ம் ஆண்டு முதல் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தலைவர் மாளிகை

 

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு மொத்தம் 6 அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் நாளான நாளை முதலாவது அமர்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்க உரையாற்றுகிறார்.

இரண்டாவது அமர்வில், மத்திய அரசின் முக்கிய நல திட்டங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்த அமர்வில் பேச உள்ளார். இந்த அமர்வின் நிகழ்ச்சிகளை நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியும், பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவலும் தொகுத்து வழங்குகிறார்.

மூன்றாவது அமர்வில், மாநில பல்கலைக்கழங்களின் உயர்கல்வி குறித்தும், வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த அமர்வை, குஜராத் ஆளுநர் ஒருங்கிணைக்கிறார், மத்திய உயர்கல்வித்துறை செயலாளரும், மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுச் செயலாளரும் தொகுத்து வழங்க உள்ளனர்.

நான்காவது அமர்வில், மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்கள் ‘ராஜ்யபால்- விகாஸ் கே ராஜ்தூத்’ எனப்படும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆளுநர்களின் பங்கு என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இது விவாதிக்கப்பட உள்ளது. இந்த அமர்வை தெலங்கான மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களின் ஆளுநரான நரசிம்மன் ஒருங்கிணைக்கிறார்.

ஜூன் 5-ம் தேதி நடைபெறும் 5-வது அமர்வில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை எப்படி நினைவுகூரவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் தொகுத்து வழங்க உள்ளார்.

ஆறாவது மற்றும் கடைசி அமர்வில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பேச உள்ளனர்.

மேலும், யூனியன் பிரதேசத்தில் உள்ள லெப்டினென்ட் கவர்னர்களுக்கான சிறப்பு அமர்வும் நடக்க உள்ளது. அதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அந்த அமர்வில் அமைச்சரவைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் பங்கேற்கின்றனர். மேலும், குடியரசு துணைத்தலைவர் , பிரதமர், உள்துறை அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர்துறை, கலாச்சாரத்துறை, நிதிஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.

Google+ Linkedin Youtube