முன்தயாரிக்கப்பட்ட கேள்விகள், பதில்கள்: உண்மையான கேள்வியை மோடியால் எதிர்கொள்ள முடியுமா?: ராகுல் சவால்

முன்தயாரிக்கப்பட்ட கேள்விகளையும், பதில்களையும் பேசும் மோடியால், உண்மையான கேள்வியை எதிர்கொள்ள முடியுமா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சமீபத்தில் பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலையில் பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசி முடித்தபின், மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் உலகளவில் ஆசியா சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பிரதமர் மோடி பதில் அளித்தார்.

 

ஆனால், மோடி அளித்த பதிலைக் காட்டிலும் அவரின் மொழிபெயர்ப்பாளர் அளித்த பதிலில் ஏராளமான புள்ளிவிவரங்கள், தகவல்கள் அடங்கி இருந்தன. இந்தப் பதில் அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டு கேள்வியைக் கேட்கக் கோரி, அதற்கான பதிலும் தயாராக வைத்திருந்தது போல் இருந்தது என காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியின் வீடியோவை பதிவிட்டு, ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உடனுக்குடன் கேட்கப்படும் கேள்வியை எதிர்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான், அவரின் மொழிபெயர்ப்பாளரும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பதிலை உடனுக்குடன் வைத்திருக்கிறார். நல்லது. நமது பிரதமர் மோடி இதன் மூலம் நிகழ்காலத்தில் உடனுக்குடன் கேட்கப்படும் கேள்வியை எதிர்கொள்ளமாட்டார் என்பது தெரிகிறது. ஒருவேளை முன்கூட்டியே திட்டமிட்டு கேள்வியைக் கேட்டு, அதற்கு முன்கூட்டியே பதில் தயாராக வைத்திருந்தால், அது நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய வெட்கக்கேடாகும்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் மாணவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மோடி சுருக்கமாக பதில் அளித்தாலும், அவரின் மொழிபெயர்ப்பாளர்கள் அந்த கேள்விக்கு மிகவும் விரிவாக, புள்ளிவிவரங்களோடு, ஆண்டு, சதவீதம் என அனைத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டனர். உடனுக்குடன் ஒருவர் கேட்கும் பல்வேறு துறை தொடர்பான கேள்விக்கு இதுபோன்று விரிவாகப் பதிலை புள்ளிவிவரங்களோடு தருவது எளிதானது அல்ல. இது கேள்விகளை முன்கூட்டியே எழுதிக்கொடுக்கப்பட்டு, அதற்கான பதிலும் தயார்செய்யப்பட்டுக் கேட்கப்பட்டு இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது    

Google+ Linkedin Youtube