ஐஏஎஸ் தேர்வில் அனுமதிக்காததால் இளைஞர் தற்கொலை: ‘தாமதமாக வந்தது குறைதான், மனிதநேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்’: கண்ணீர் கடிதம்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தாமதமாக வந்த இளைஞர் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

“விதிகள் எல்லாம் சரியாக கடைப்பிடிக்கிறீர்கள், கொஞ்சம் மனிதநேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்” என்று அதிகாரிகளுக்கு அந்த இளைஞர் கண்ணீரோடு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் வருண். இவர் யுபிஎஸ்சி தேர்வுகளுக்குப் படிப்பதற்காக வடக்கு டெல்லியில் உள்ள ராஜேந்திரா நகரில் நண்பர்களுடன் ஒரு வீடு எடுத்துத் தங்கி நீண்டகாலமாகப் படித்து வந்தார்.

இந்நிலையில், யுபிஎஸ்சிக்கான முதனிலைத் தேர்வு நேற்று நாடுமுழுவதும் நடந்தது. அப்போது, தேர்வு மையத்துக்குக் குறித்த நேரத்துக்கு வருண் செல்லவில்லை. இதனால், தேர்வு மைய அதிகாரி, வருணை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. வருண் நீண்டநேரம் காத்திருந்தும், கெஞ்சியும் அதிகாரிகள் அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மனமுடைந்த வருண் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

தேர்வு முடிந்தபின், வருணின் தோழி ஒருவர் அவரின் செல்போனுக்கு அழைப்புச் செய்தும் அவர் எடுக்கவில்லை. இரவு முழுவதும் பலமுறை அழைத்தும் அவர் செல்போன் ஒலித்துக்கொண்டதே தவிர எடுக்கவில்லை. இதையடுத்து, இன்று காலை அந்தப் பெண் வருண் தங்கி இருந்த வீட்டுக்குச் சென்று கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.

இதையடுத்து, அந்த பெண் ராஜேந்திரா நகர போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அங்குவந்து கதவை உடைத்துப் பார்க்கையில், வருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

அவரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் வருண் உருக்கமாக எழுதி இருந்தார். அதில் யுபிஎஸ்சி தேர்வுக்காக நீண்ட காலமாக நான் தயாரானேன், என் கனவுபோல் கருதித் தேர்வு எதிர்பார்த்திருந்தேன். ஆனால், சிறிதுநேரம் தாமதமாக வந்ததால், என்னைத் தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. விதிகளை எல்லாம் நன்றாக கடைப்பிடிக்கிறார்கள். அதுசரிதான். ஆனால், சிறிது மனிதநேயத்தோடும் அதிகாரிகள் நடந்து கொள்ளவேண்டும். என் தாயும், தந்தையும், குடும்பத்தாரும் என்னை மன்னிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு மகன் உங்களுக்கு இருந்தான் என்பதைத் தயவு செய்து மறந்துவிட்டு நிம்மதியாக இருங்கள்

இவ்வாறு உருக்கமாக வருண் எழுதியிருந்தார்.

இதையடுத்து, வருணின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google+ Linkedin Youtube