தூத்துக்குடி துப்பாக்கி சூடு: துரதிர்ஷ்டவசமானது தலைமை நீதிபதி வேதனை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்13 பொதுமக்கள் பலியானது துரதிர்ஸ்டவசமானது என இன்று வழக்கின் இடையே தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியாகி பாதுகாக்கபடும் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் மருத்துவரை சேர்க்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்ட்டன், பார்வேந்தன், பாவேந்தன், நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ளது.

இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வின் முன்பு மில்ட்டன் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி முறையீடு ஒன்றை வைத்தார். ஏற்கனவே 7 பேரின் மறு உடற்கூறு ஆய்வின்போது, சென்னை உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி டெல்லி எய்ம்ஸ் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவரை ஆலோசிக்காமல் ஜிப்மர் மருத்துவரை மட்டுமே தேர்வு செய்ததால், மீதமுள்ள 6 உடல்களை உடற்கூறு ஆய்வு செய்வதில் தங்கள் மருத்துவரை சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அந்த வழக்கை நாளைக்கே விசாரணைக்கு ஏற்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியானது துரதிஷ்டவசமானது என வேதனை தெரிவித்தார், குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் ஒருவரின் உடலை எத்தனை நாட்களுக்கு பாதுகாத்து வைப்பது என்று கேள்வி எழுப்பிய அவர் நாளை வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தார்.

Google+LinkedinYoutube