குண்டு வெடிப்பில் நண்பனை இழந்தேன்; ஓராண்டாக வீட்டுக்குச் செல்லவில்லை: ஆப்கான் நட்சத்திரம் ரஷீத் கான் உருக்கம்

நம்பர் 1 டி20 பவுலரான ஆப்கான் கிரிக்கெட் அணியின் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான், டெஸ்ட் கிரிக்கெட், ஆப்கான் குண்டு வெடிப்புகள், நண்பனை இழந்தது என்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

“டெஸ்ட் கிரிக்கெட்டராக இருப்பது ஒருநாள், டி20யிலிருந்து அதிகம் வேறுபட்டதல்ல. எனக்குக் கிடைத்த 4 நாட்கள் போட்டி வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன். டெஸ்ட் கிரிக்கெட் என்று யோசித்து பந்து வீச்சை மாற்றினேன் அது எனக்கு நல்லதல்ல. நான் இப்போது என்ன வேகத்தில் வீசுகிறேனோ அப்படித்தான் டெஸ்ட் போட்டியிலும் வீசுவேன்.

பதற்றமடையக் கூடாது என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும், 20 ஓவர்கள் வீசியும் விக்கெட் விழாமல் கூட இருக்கும், பிறகு 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளைக் கூட வீழ்த்துவேன், இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் சாராம்சம்.

பொறுமைக்கு விடுக்கப்படும் சவாலாகும் டெஸ்ட் கிரிக்கெட், ஏன் விக்கெட்டுகளே கூட வீழ்த்த முடியாமல் போனாலும் போகும்.

நான் என் வீட்டுக்கு ஓராண்டாகச் செல்லவில்லை, என்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரிதும் இழக்கிறேன். ஆப்கானில் குண்டுவெடிப்புகள் என்று செய்திகள் என் காதுகளைத் துளைக்கின்றன. ஐபிஎல் ஆட்டத்தின் போது கூட என் ஊரில் குண்டு வெடிப்பு, எனக்கு கடும் ஏமாற்றமாக இருந்தது, அதில் என் நெருங்கிய நண்பரை இழந்தேன்.

என்னுடைய இன்னொரு நண்பர் அந்தப் போட்டிக்குப் பிறகு என்னிடம் தொடர்பு கொண்டு ஏன் சிரித்த முகத்துடன் இருக்கும் நீ அவ்வாறு இல்லை என்று வினவினார்.

ஆகவே இந்தச் சம்பவங்கள் என்னைப் பெரிதும் பாதிக்கின்றன. ஆனாலும் என் மனத்தை சரியான நிலையில் நிறுத்துகிறேன். என் ஆட்டத்தின் மூலம் என் நாட்டு ரசிகர்கள் இந்த பயங்கரக் காலக்கட்டத்திலும் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதற்காகத்தான் ஆடுகிறேன்.

இவ்வளவு குறுகிய காலத்தில் என் வாழ்க்கையில் சாதனைகளை நிகழ்த்துவேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. இது கனவு போன்றதுதான்.

சச்சின் என்னைப் பாராட்டி ட்வீட் செய்தது மெய்சிலிர்க்க வைத்தது, அவருக்கு என்ன பதிலளிப்பது என்று மணிக்கணக்காக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த 2 மாதங்கள் ஏன் கடந்த 2 ஆண்டுகள் கூட எனக்கு நல்லதாக உள்ளது. தேசிய அணியில் இணைந்ததால் எனக்கு சேர வேண்டிய வெற்றி எனக்குக் கிடைத்தது. இதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன் அதனால்தான் வெற்றி பெறுகிறேன்.

நிறைய அணிகளில் ஆடுகிறேன், உலகம் முழுதும் சுற்றுகிறேன், ஒரு தொழில்பூர்வ வீரராக இது கடினமே, ஆனால் பழகிக் கொள்ள வெண்டும். கடந்த சில ஆண்டுகளாக நிறைய பயணங்கள். தொடர்ந்து பயணங்கள் இறங்கியவுடன் கிரிக்கெட் போட்டிகள் என்றால் உடல் தகுதி அதற்கு உரியதாக இருக்க வேண்டும்.

Google+ Linkedin Youtube