மிசோரமில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி

மிசோரம் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

மிசோரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அய்ஸால், சம்பாய், கொலாஸிப் ஆகிய மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், அய்ஸால் மாவட்டத்தில் உள்ள லுங்லான் பகுதி யில் நேற்று முன்தினம் இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் ஆகியவை தரைமட்டமாகின. இந்தச் சம்பவத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். மேலும், 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புப் படையினர், அங்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் 9 பேர் பலி

மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் மாவட்டத்திலிருந்து ஷியாஹா மாவட்டத்தை நோக்கி நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பங்கால் கிராமம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள மலைப் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். - பிடிஐ

Google+ Linkedin Youtube