மெஸ்ஸிக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா

அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸிக்கு அச்சுறுத்தல் எற்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை அந்நாடு ரத்து  செய்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள்  இம்மாதம் ரஷ்யாவில் தொடங்கவுள்ளன. இதனைத் தொடர்ந்து இஸ்ரெல் - அர்ஜென்டினா இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற இருந்தது.

ஆனால், இஸ்ரேல்- பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுடன் அர்ஜென்டினா அணி கால்பந்துப் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்று பாலஸ்தீன தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும் அர்ஜென்டினா வீர்ர லியோனல் மெஸிக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இந்த நிலையில் இஸ்ரேல் உடனான நட்பு ரீதியிலான ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிடார் லெபர்மன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அர்ஜென்டினா ஜெருசலேமில் விளையாட இருந்த கால்பந்துப் போட்டியை ரத்து செய்துள்ளது. அர்ஜென்டினா வெறுப்புக்கு சரணடைந்துள்ளது. இது அவமானம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் முதல் காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் நாள்தோறும் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு தூப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகிறது. இதில் இதுவரை  100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

Google+LinkedinYoutube