‘‘சகிப்பின்மையால் நாட்டின் பன்முகத்தன்மை பாதிப்புக்குள்ளாகும்’’ - ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேச்சு

சகிப்பின்மையால் நாட்டின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து ஏற்படும் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு இன்று ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பயற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகிறார். ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அவர் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பகிரங்கமாக கருத்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஜாபர் ஷெரீப், சிதம்பரம் உள்ளிட்டோரும் பிரணாப் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

ஆனால், அதை பிரணாப் முகர்ஜி ஏற்கவில்லை. பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அவரது மகளும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பிரணாப் முகர்ஜி நாக்பூர் செல்வதால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தவறான கதைகளை கட்டவிழ்த்து விடும். அந்த பிரிவினைவாத அமைப்பு தங்கள் கொள்கைகளை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) ஏற்றுக் கொண்டு விட்டதாக விஷம பிரச்சாரம் செய்யும்’’ எனக் கூறினார்.

விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலையே நாக்பூர் வந்து சேர்ந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் பிறந்த நினைவு இல்லத்திற்கு பிரணாப் சென்றார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில் அவர் ‘‘பாரத தாயின் மிகச்சிறந்த தவப்புதல்வனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இங்கு இன்று வந்துள்ளேன்’’ என எழுதினார்.

பிரணாப் முகர்ஜிக்கு ஏன் அழைப்பு?- ஆர்எஸ்எஸ் தலைவர் விளக்கம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர், பிரணாப் முகர்ஜியை அழைத்ததற்கான காரணத்தை குறிப்பிட்டார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இந்த நிகழ்ச்சிக்கு பிரணாப் முகர்ஜியை அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தேவையற்றது. மாற்று கருத்து கொண்டவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைப்பது ஆர்எஸ்எஸ்.ன் பாரம்பரியம்.

ஆர்எஸ்எஸ் கொள்கையில் உடன்பாடு இல்லாதவர்களையும் விழாவுக்கு அழைப்பதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். காங்கிரஸ் உட்பட வேறு கொள்கைகளை பின்பற்றும் பல தலைவர்கள் இதற்கு முன்பும் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு வந்துள்ளனர். ஆர்எஸ்எஸ், ஆர்எஸ்எஸ்ஸாக இருக்கும். பிரணாப் முகர்ஜி, பிரனாப் முகர்ஜியாக தான் இருப்பார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் அவரது எண்ணங்கள், கொள்கைகள் மாறாது’’ எனக்கூறினார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் நிறுவனர் குறித்து பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல், ‘‘பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரிடம் இருந்து இதுபோன்ற ஒரு செயலை நான் எதிர்பார்க்கவில்லை’’ எனக் கூறினார்.

இதைதொடர்ந்து ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நாட்டின் பல்வேறு பொறுப்புகளில் வகித்தவன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து வருபவன். இந்த நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீது மாறாத பற்று கொண்டவன். மேலாக சகிப்பின்மையால் நாட்டின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து ஏற்படும். ஒரு சிலரை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு பன்முகத் தன்மையை கொண்டாட முடியாது. இதை நான் உறுதியாக கூறுகிறேன்’’ என பேசினார்.

Google+ Linkedin Youtube