தடகள வீரர்கள் 33% வருமானத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்: ஹரியாணா அரசின் அதிரடி உத்தரவால் சர்ச்சை

தடக வீரர்கள் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என ஹரியாணா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  முதல்வர் மனோகர் லால் கட்டாரின் உத்தரவுக்கு வீரர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் ் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் ஹரியாணா வீரர் மற்றும் வீராங்கனைகள் 22 பதக்கங்கள் பெற்றனர்.

இந்நிலையில், தடகள வீரர்கள் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு அதாவது, 33 சதவிகிதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் ஹரியாணா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் பணத்தை மாநிலத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும் எனவும் ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் ‘‘ஹரியாணா மாநில அரசின் விளையாட்டுத்துறை சார்ந்த எந்த அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் தடகள  வீரர்கள், அதுபோலவே அரசு பணியில் உள்ள தடகள வீரர்கள், வர்த்தக ரீதியில் விளையாட்டு மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் தங்கள் வருவாயில் மூன்றில் ஒருபங்கை மாநில விளையாட்டு கவுன்சிலில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் தொகை மாநிலத்தில் விளையாட்டை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும். அதுபோலவே மாநில அரசு துறைகளில் பணிகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஏராளமான விடுமுறைகள் எடுக்கின்றனர். அரசு துறை பணியில் விடுமுறை எடுத்துக் கொண்டு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் நிலையில் அதன் மூலம் வருவாயை மாநில அரசுக்கு செலுத்த வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அரசின் அறிவிப்புக்கு மாநிலத்தில் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குத்துச்சண்டை வீராங்கனை பபிதா கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாடும், மாநிலமும் விளையாட்டை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீர்ர்களை உற்சாகப்படுத்தவும் பல கோடி ரூபாய் பணத்தை செலவழிக்கிறது. ஆனால் இதற்கு மாறாக ஹரியாணா அரசு விளையாட்டு வீரர்களுக்கு தண்டனை வழங்குகிறது’’ எனக் கூறியுள்ளார். இதுபோல ஓலிம்பிக் வீரர் சுஷில்குமார் உள்ளிட்ட வேறு சில விளையாட்டு வீரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஹரியாணா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் விஜ் அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார். தடகள வீரர்களுக்கு வேறு எந்த மாநிலமும் செய்யாத அளவில் அதிகபட்ச பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கி வருவதால் இந்த நடவடிக்கை தேவையாகிறது எனக் கூறியுள்ளார்.

அரசு பணியில் உள்ள விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் அவர்களுக்கு ஹரியாணா மாநில அரசு வழங்கும் பரிசுத் தொகை கிடையாது என அம்மாநில அரசு முன்னதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube